×

கருணாநிதி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

புதுச்சேரி, ஆக. 9:  திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு புதுச்சேரி அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.அன்பழகன் (அதிமுக):  தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து, தனது நெடிய உழைப்பாலும், கொண்ட கொள்கையில் உறுதியோடும், தலைமை பண்பாலும் தமிழக அரசியல் அரங்கில் ஒப்பற்ற முப்பெரும் தலைவராக விளங்கியவர் கருணாநிதி. சிறந்த அரசியல்வாதி, சுயமரியாதை உணர்வுகளை கட்டிக் காத்தவர். ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் நலனில் அக்கறை கொண்டவர். அனைத்து துறைகளிலும் தனி முத்திரை பதித்தவர். அவரது மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும். அரசியலில் இரு துருவங்களாக இருந்தபோதும் தலைவர் எம்ஜிஆரின் நட்புக்கு பாராட்டு பெற்றவர். அரசியல் ரீதியில் பல்வேறு மாறுபட்ட விமர்சனங்களை செய்திருந்தாலும், கருணாநிதியின் திறமைகள், பெருமைகளை அவரின் சிறப்புகளை இத்தருணத்தில் யாராலும் நினைவு கூறாமல் இருக்க முடியாது. திராவிடத்தின் முதுபெரும் தலைவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவருடைய தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

 சாமிநாதன் (பாஜக தலைவர்):  தமிழக அரசியல் வரலாற்றை எழுதும் எவரும் தவிர்க்க முடியாத ெபயர் கருணாநிதி. உலக தமிழர்களுக்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவர். பகுத்தறிவு கொள்கையிலும், சமூகப் பணியிலும் அவருக்கு இருந்த பேரார்வமே தமிழ்நாட்டின் தலைசிறந்த முதல்வராக அவரை செயல்பட வைத்தது. தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து அசைக்க முடியாத ஒரு சக்தியாக விளங்கினார். தொழில்துறையில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இதுவரை ஒருமுறைகூட தோல்வியை சந்திக்காத ஒரே சட்டமன்ற உறுப்பினர் உலகின் எந்த நாட்டிலும் இல்லை என்ற ஒப்பில்லா சாதனையைப் புரிந்த இவர் இன்று நம்மிடையே இல்லை என்பதை எண்ணும்போது தாங்க முடியாத வேதனையை தருகிறது.
 இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதேபோல் ராதாகிருஷ்ணன் எம்பி., புதிய நீதிக் கட்சி பொன்னுரங்கம், விஸ்வகர்ம முன்னேற்றக் கழகம் சரவணன் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...