×

எலும்புகளைக் காக்கும் வைட்டமின் ‘சி’

நன்றி குங்குமம் டாக்டர்
 
உணவு ரகசியங்கள்


நீரில் கரையக்கூடிய தன்மையுள்ள வைட்டமின் “சி”யின் வேதியியல் பெயர்  “அஸ்கார்பிக் அமிலம்”. இது “ஹெக்சுரோனிக் அமிலம்” மற்றும் “ஆன்ட்டிஸ்கார்புடிக்” சத்து என்றும் அழைக்கப்படுகிறது. கப்பல் பயணத்தில் இருந்த மாலுமிகளுக்கும், பயணிகளுக்கும் “ஸ்கர்வி” நோயின் அறிகுறிகள் இருந்ததையும், இதனால் 2 மில்லியன் மாலுமிகள் பாதிக்கப்பட்டிருந்ததையும் 1747 ல் பிரிட்டிஷ் மருத்துவர் ஜேம்ஸ் லிண்ட் என்பவர் கண்டார்.

அதற்குத் தீர்வாக ஆறு விதமான சிகிச்சைகளை மேற்கொண்ட நிலையில், ஆரஞ்சுப் பழமும் எலுமிச்சை பழமும் சிறப்பாகக் குணமளிப்பதைக் கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, 1928 ல் ஆல்பர்ட் சென்ட் கியோர்கி என்பவர் அட்ரீனல் சுரப்பியிலிருந்து  பிரித்தெடுத்த ஒரு நுண்பொருளுக்கு “ஹெக்சுரோனிக் அமிலம்” என்று பெயரிட்டார். பிறகு சார்லஸ் கிலென் கிங் என்பவர் வைட்டமின் “சி” யை ஆய்வகத்தில் உருவாக்கியபின்னர், ஹெக்சுரோனிக் அமிலமும், வைட்டமின் சி யும் ஒன்றுதான் என்று உறுதிசெய்தார்.

வைட்டமின் “சி” யின் செயல்பாடுகள்

வைட்டமின் “சி” சத்து, உடலின் மிகப்பிரதானமான பணிகளைச் செய்கிறதென்றால் மிகையாகாது. உடலின் செல்கள் மற்றும் திசுக்களை ஒன்றோடொன்று இணைத்துப் பிணைக்கும் புரதமான “கொலாஜென்” என்னும் இணைப்புப்பொருள் உருவாவதற்கு வைட்டமின் “சி” அத்தியாவசியம். இது மட்டுமல்லாமல், எலும்பு, பற்கள், சிறுசிறு மென்மையான எலும்புச் சவ்வுகள், தோல் போன்றவற்றின் உருவாக்கத்திற்கும் வைட்டமின் “சி” யே மூலப்பொருளாக இருக்கிறது. கொலாஜென் உற்பத்தியின்போது நிகழும் உயிர்வேதியியல் மாற்றங்களுக்கு இரும்புச்சத்தும், கால்சியமும் அவசியம் என்பதால், அவற்றைப் போதுமான அளவில் உட்கிரகித்து, தக்கவைத்து உடலுக்கு அளிக்கும் பணியையும் வைட்டமின் “சி” செய்கிறது. ரத்தநாளங்கள் குறிப்பாக இதயத்தின் ரத்தக்குழாய்கள் நெகிழ்வுத் தன்மையுடன் உறுதியாகவும் இருப்பதற்கு வைட்டமின் “சி” அவசியம்.

உடலின் இயக்கத்திற்கும், உறுப்புகளின் செயல்பாடுகளுக்கும் தேவையான கலோரி அல்லது ஆற்றலைக் கொடுக்கும் கொழுப்பு அமிலங்களுக்கு உதவிபுரியும் “கார்னிடின்” என்னும் நைட்ரஜன் மூலப்பொருளை உற்பத்தி செய்யவும் வைட்டமின் “சி” தேவைப்படுகிறது. மூளையில் சுரக்கும் உயிர்வேதிப்பொருளான “நார்எபினெப்ரின்”(Norepinephrin) உற்பத்திக்கும், கால்சிடோசின், ஆக்ஸிடோசின், தைரோடிரோபின் உள்ளிட்ட பல ஹார்மோன்களை செயல்படும் நிலைக்கு மாற்றவும் வைட்டமின் “சி” யின் தேவை மிகுந்த அவசியமாகிறது.

சிகிச்சைகளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் சரியாக செயல்படுவதற்கும், வெளிப்புறக் காரணிகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும் இயற்கையான நோய் எதிர்ப்புச்சக்திக்கும் வைட்டமின் “சி” அத்தியாவசியம். வைட்டமின் “சி” தேவையான அளவு நடுத்தர வயது ஆண்களுக்கு 80 மில்லி கிராமும் பெண்களுக்கு 65 மில்லி கிராமும் தினசரி அளவாக வைட்டமின் “சி” பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு கூடுதலாக 15 மில்லி கிராமும் பாலூட்டும் தாய்க்கு கூடுதலாக 50 மில்லி கிராமும் வைட்டமின் “சி” பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் வரையில் 20 மில்லி கிராமும், ஒரு வயது வரையில் 30 மில்லி கிராமும் வைட்டமின் “சி” தேவைப்படுகிறது. ஒரு வயது வரையில் தாய்ப்பால் புகட்டப்படும் குழந்தைக்கு பெரும்பாலும் வைட்டமின் “சி” சத்துக் குறைபாடு ஏற்படாததற்குக் காரணம் தாய்ப்பாலில் போதுமான அளவில் இந்தச் சத்து இருப்பதுதான்.

வைட்டமின் “சி” குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்

வைட்டமின் “சி” நீரில் கரையும் சத்து என்பதாலும், உடலால் உற்பத்தி செய்து சேமித்து வைக்க இயலாது என்பதாலும், உடலால் தினசரி உணவின் மூலம்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை தினசரி உணவில் வைட்டமின் “சி” சத்து நிறைந்த உணவுகள் இல்லையெனில் நிச்சயம் குறைபாடு ஏற்படும். இது மிகப்பொதுவான காரணம். இது தவிர குறிப்பாகக் கூறக்கூடிய மிக முக்கிய காரணங்கள் பல இருக்கின்றன. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் காலத்தில் வைட்டமின் “சி” யின் தேவை அதிகரிக்கும். அனைத்து வகையான காய்ச்சல், தைராய்டு குறைபாடு அல்லது மிகைநிலை, நீண்ட நாட்களுக்கு வயிற்றுப்போக்கு, அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், அதிக ரத்தப்போக்கு, புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு வைட்டமின் “சி” குறைபாடு ஏற்படும்.

தொடர்ச்சியான புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த வைட்டமின் தேவை அதிகம்தான். இந்தத் தேவையை சரிசெய்யும் பொருட்டு போதுமான அளவில் வைட்டமின் “சி” நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவில்லை என்றால், நிச்சயம் அவர்களுக்கு குறைபாட்டு நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இவை மட்டுமல்லாமல், முதுமை வயதில் சரியான உணவு இல்லாத நிலை, குடல் சார்ந்த நோய்களில் வைட்டமின் “சி” கட்டுப்பாடு, மனநலம் குன்றியவர்கள், வைட்டமின் “சி” நிறைந்த காய், பழங்களை சேர்த்து, சரிவிகித உணவு எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும் வைட்டமின் “சி” குறைபாடு ஏற்படுகிறது.

வைட்டமின் “சி” குறைபாடு

வைட்டமின் “சி” குறைபாட்டினால் ஏற்படும் நோய்க்கு “ஸ்கர்வி” என்று பெயர். வாய் ஓரங்களிலும், பல் ஈறுகளிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தும் இந்நோயின் ஆரம்பநிலை அறிகுறிகளாக சிறுசிறு திட்டுகளாக தோல் சிவந்திருத்தல், தசை மற்றும் மூட்டுகளில் வலி, உடல் சோர்வு, எப்போதும் உடல் நலிவுற்ற நிலையில் இருப்பது போன்ற உணர்வு போன்றவை ஏற்படும்.

இந்த சிறு அறிகுறிகளை கவனித்து சரிசெய்யவில்லையெனில் உடல் எடை குறைவு, படபடப்பு, ரத்த அழுத்தம் குறைதல், காயங்கள் குணமாவதில் தாமதம், தோலில் காயங்கள், உலர்ந்த தோல் மற்றும் உதடு, தலை முடி உதிர்தல், ஈறுகள் வீங்கியும் சிவந்தும் ரத்தக்கசிவு, அடிக்கடி ஏதேனும் தொற்று ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பிற்கு உள்ளாகுதல் போன்றவை நீண்டகால அறிகுறிகளாக அல்லது நிரந்தர பிரச்னையாக மாறிவிடும். இதற்கான தீர்வாக, வைட்டமின் “சி” நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதுடன், விரைவான சிகிச்சையாக 6.5 - 10 மில்லிகிராம் அளவிலான வைட்டமின் “சி” யை எடுத்துக்கொள்ளலாம்.

வைட்டமின் “சி” மிகைநிலை

வயிற்றுப்போக்கு, குமட்டல், வயிற்றுவலி, வயிற்று உப்புசம், செரிமானத்தில் சிக்கல் போன்றவைதான் பொரும்பாலும் மிகை நிலையின் அறிகுறிகளாகத் தோன்றும். வைட்டமின் “சி” சத்து நீரில் கரையக்கூடியது என்பதால், உடலுக்குப் போதுமான அளவில் உட்கிரகித்துக்கொள்ளப்பட்டதும், மீதமுள்ள சத்து, உடலாலேயே வெளியேற்றப்பட்டுவிடும். உதாரணமாக, ஒருவர் ஒரு நாளைக்கு 30 - 180 மில்லிகிராம் வைட்டமின் “சி” எடுத்துக் கொள்கிறார் என்றால், அவருடைய உடல் 70 - 90 % அளவிற்கு உட்கிரகித்துவிடும். ஒருவேளை 180 மில்லி கிராமிற்கும் அதிகமாக எடுத்துக்கொள்கிறார் என்றால், உடல் தானாகவே 50 % குறைவாகத்தான் உட்கிரகிக்கும்.

இதன் காரணமாகவே இந்த வைட்டமின் மிகை அவ்வளவாக ஏற்படுவதில்லை. வைட்டமின் “சி” உச்சபட்ச வரம்பாக 3 வயதுக் குழந்தைக்கு 400 மில்லி கிராமும், 18 வயது உள்ளவர்களுக்கு 1800 மில்லி கிராமும் வரையறுக்கப்பட்டுள்ளது.  இந்த அளவிற்கும் அதிமாகும்போது சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதுடன், பிற நுண்சத்துக்களான வைட்டமின் பி12 மற்றும் காப்பர் சத்து குறைபாடும் ஏற்படலாம்.

வைட்டமின் “சி” நிறைந்த உணவுகள்

இயற்கையில் கிடைக்கும் உணவுகளில் பழங்கள் மற்றும் காய்களில் வைட்டமின் “சி” சத்து நிறைவாக உள்ளது. குறிப்பாகப் பழங்களில் கொய்யா (212 மி.கி), நெல்லி (600 மி.கி), ஆரஞ்சு (30 மி.கி) , எலுமிச்சை போன்ற புளிப்புச் சுவையுள்ள பழங்கள், குடை மிளகாய்(137 மி.கி) போன்றவற்றில் வைட்டமின் “சி” சத்து அதிகம் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அடர்பச்சை கீரைகள், முருங்கைக்கீரை (220 மி.கி) பச்சைக் காய்கள், பப்பாளி, உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவற்றில் உள்ளது. விலங்குகளுக்கு வைட்டமின் “சி” சத்தினை உற்பத்தி செய்துகொள்ளும் திறன் உள்ளதால், இறைச்சி  வகைகளிலும் இந்த சத்து உள்ளது. இவை தவிர, தானிய உணவுகள் மற்றும் பழச்சாறுகள் வைட்டமின் “சி”சத்துடன் செறிவூட்டப்படுகின்றன.

என்றாலும், இயற்கையில் கிடைக்கும் சைவ மற்றும் அசைவ உணவுகளே சரியான அளவிலான வைட்டமின் “சி” சத்தைக் கொடுத்து என்றும் உடலுக்கு நன்மை செய்யக்கூடியவை. சமைத்தலின்போது, வைட்டமின் “சி” சத்து மிக எளிதில் நீரில் கரைந்தும், காற்றில் ஆக்ஸிஜனேற்றம் அடைந்தும் அழிந்துவிடும் என்பதால், குறைவான அளவில் தண்ணீர் வைத்துக் காய்களை வேகவைப்பதுடன், அந்தத் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்துவதன் மூலம், வைட்டமின் “சி” உடலுக்குக் கிடைக்கிறது.

சரியான நேரத்தில் அறுவடை, பயிர் பாதுகாப்பு, குறைவான சூரியவெளிச்சத்துடன் பாதுகாப்பு செய்தல், பழங்களை நறுக்கியவுடன் சாப்பிடுதல், பழச்சாறு தவிர்த்தல் போன்ற செயல்முறைகளைப் பின்பற்றினால் உணவுப்பொருளிலிருக்கும் பெரும்பான்மையான  வைட்டமின்  “சி” நேரடியாக உடலுக்குக் கிடைத்துவிடும். 

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்