×

வழிப்பறியில் ஈடுபடும் நோக்கத்துடன் 2 இடங்களில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது

கும்பகோணம், ஆக. 7:  கும்பகோணம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபடும் நோக்கத்துடன் கும்பகோணம் பகுதியில் 2 இடங்களில் ஆயுதங்களுடன் மறைந்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். கும்பகோணம் மாதுளம்பேட்டை பகுதியில் மேற்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பாரதியார் தெரு முத்துவேல் (34), அருண்குமார் (35), ரயில்வே ஸ்டேஷன் ரோடு லாரன்ஸ் (45), சிலம்பரசன், தமிழரசன் ஆகிய 5 பேர், அரிவாள், உருட்டு கட்டைகளுடன் பதுங்கியிருந்தனர். அப்போது போலீசார் வருவதை பார்த்ததும் தமிழரசன், சிலம்பரசன் ஆகியோர் ஆயுதங்களை போட்டு விட்டு தப்பியோடினர். இதில் முத்துவேல், லாரன்ஸ், அருண்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல தாராசுரம் சுடுகாட்டு பகுதியில் எம்ஜிஆர் நகர் சிவா (28), மறவர் தெரு வெங்கடேசன் (29), ஸ்ரீராம் நகர் விக்னேஷ் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய பிரகாஷ், திருநாவுக்கரசை  தேடி வருகின்றனர். இதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வழிப்பறியில் ஈடுபடுவதற்காக ஆயுதங்களுடன் 6 பேரும் மறைந்திருந்தது தெரியவந்தது.

பைக்  மோதி முதியவர் பலி: கும்பகோணம் அருகே மாடாகுடி கீழத்தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (45). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் பைக் ஓட்டி சென்றார். அப்போது அவ்வழியே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்றார். அவர் மீது வினோத்குமார் ஓட்டி சென்ற பைக் மோதியதில் முதியவர் பலியானார். இதுகுறித்து தில்லையம்பூர் விஏஓ ஜெயராஜ் அளித்த புகாரின்பேரில் பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்டுடியோவின் மேற்கூரையை பிரித்து பொருட்கள் திருட்டு : சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள தெற்கு நாட்டாணிக்கோட்டையை சேர்ந்தவர் முருகேசன் (33). பூக்கொல்லை கடைவீதியில் ஸ்டுடியோ மற்றும் செல்கார்னர் வைத்து நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஸ்டுடியோவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை ஸ்டுடியோவை திறந்து பார்த்தபோது மேற்கூரை பிரிக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது.

இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 கேமராக்கள், 10 செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் உட்பட ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர்  தற்கொலை:  திருவையாறு அடுத்த கரூர்காட்டுக்கோட்டை மெயின்ரோட்டை சேர்ந்தவர் தங்கராசு (40). இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். வயிற்றுவலி அதிகமானதால் கடந்த 3ம் தேதி வீட்டின் அருகே பூச்சிமருந்தை குடித்து மயங்கினார். இதையடுத்து அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து தங்கராசு மனைவி ராமு (35) கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொழிலாளி மர்மச்சாவு:  தஞ்சை அருகே குருங்குளம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (40). இவர் தஞ்சையில் உள்ள தனியார் இனிப்பகத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவர் தஞ்சை அருகே உள்ள நாகப்புடையான்பட்டியில் உள்ள வயலில் நேற்று முன்தினம் நெற்றியில் காயத்துடன் இறந்து கிடந்தார். அருகில் இவர் ஓட்டி வந்த பைக் கிடந்தது. மருங்குளம் விஏஓ கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் வல்லம் போலீசார்  வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 2 வீடுகளில் நகைகள் திருட்டு: தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அடுத்த சூழியக்கோட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் மனைவி மல்லிகா (55). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலையில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், 600 கிராம் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து மல்லிகா அளித்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: சூழியக்கோட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் காசிநாதன் மனைவி அமுதா (53). இவர் கடந்த 4ம் தேதி வீட்டை பூட்டி  விட்டு தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை மற்றும் வெள்ளி கொலுசை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அமுதா அளித்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஆற்றில் மூழ்கிய மாணவர் உடல் மீட்பு:  திருப்பனந்தாள் அடுத்த சோழபுரம் விளந்தகண்டத்தை சேர்ந்தவர் நிஜாம். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் நிஷார்அஹம்மது (17). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில்முதலாமாண்டு படித்து வருகிறார் சம்பவத்தன்று நிஸார் அஹமது மற்றும் அவரது நண்பர்கள் 5க்கும் மேற்பட்டோர் மகாராஜபுரம் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்தனர். அப்போது தண்ணீரில் நிஸார் அஹமது மூழ்கினார். இதையடுத்து அவரை தேடும் பணியில் கும்பகோணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள மேலானமேடு கொள்ளிடம் ஆற்றில் இறந்த நிலையில் நிஸார் அஹமது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...