×

ஆட்டோவில் தவறவிட்ட பர்சை நேர்மையுடன் ஒப்படைத்த டிரைவர் போலீசார் பாராட்டு : சித்தூர் அருகே

காளஹஸ்தி, ஆக.7: சித்தூர் அருகே ஆட்டோவில் தவறவிட்ட பர்சை நேர்மையுடன் ஒப்படைத்த டிரைவரை போலீசார் பாராட்டினர்.
சித்தூர் மாவட்டம், குரபல கோட்டா மண்டலம், சிங்கண்ணகாரிபல்லி கிராமத்தை சேர்ந்தவர் மமதா. இவர் தனது தந்தையின் மருத்துவ செலவிற்காக தான் அணிந்திருந்த கம்மலை அடகு வைப்பதற்காக கடந்த 3ம் தேதி மதனபல்லி வந்தார். மதனபல்லியில் உள்ள ஒரு அடகு கடையில் கம்மலை அடகு வைத்து ரூ21,500 பெற்று, ராஜேஷ் என்பவரின் ஆட்டோவில் ஏறி மதனபல்லி அரசு பஸ் நிலையத்தை அடைந்தார். அங்கிருந்து பஸ்சில் சிங்கண்ணகாரி பல்லிக்கு சென்று விட்டார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக டிரைவர் ராஜேஷ் பெங்களூருவுக்கு சென்றுவிட்டு நேற்றுமுன்தினம் இரவு வீடுதிரும்பினார். தொடர்ந்து நேற்று தனது ஆட்டோவை சுத்தம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது அங்கு மணி பர்ஸ் இருந்ததை பார்த்து, அதை மதனபல்லி இரண்டாம் நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நாயக்கிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் அந்த மணிபர்சில் இருந்த போன் நம்பரை வைத்து மணிபர்சை தொலைத்த மமதாவிற்கு தகவல் தெரிவித்து காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர்.
அதன்பேரில் மதனபல்லி காவல் நிலையத்துக்கு வந்த மமதாவிடம் போலீசார் மணிபர்சை ஒப்படைத்தனர். மணிபர்சை பெற்றுக்கொண்ட அவர் அதில் இருந்த பணம் அனைத்தும் அப்படியே உள்ளதாகவும், அதை பத்திரமாக ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் ராஜேஷூக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். ராஜேஷின் நேர்மையான செயலுக்கு போலீசாரும் பாராட்டு தெரிவித்தனர்.

Tags :
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த 6 காட்டு...