×

மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட 48 பேர் கைது : திருவண்ணாமலையில் பரபரப்பு 8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு

திருவண்ணாமலை, ஆக. 7: சென்னை- சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை எதிர்த்து, திருவண்ணாமலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை- சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை எதிர்த்து, பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய- மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. எனவே, இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி, திருவண்ணாமலையில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. ஆனால், இப்போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

ஆனாலும், காந்திசிலை பகுதியில் நேற்று மாலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டனர். காந்திசிலையில் இருந்து தேரடி வீதி வழியாக கைகோர்த்து நின்றபடி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிக்கும் பசுமைச் சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். அதைத்தொடர்ந்து, இந்த போராட்டத்துக்கு அனுமதியில்லை என போலீசார் தெரிவித்தனர். அனுமதியின்றி போராடினால், கைது செய்வதாக தெரிவித்தனர். ஆனாலும், போராட்டம் தொடர்ந்து நடந்தது. அதைத்தொடர்ந்து, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் மாசிலாமணி, மாநில பொருளாளர் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்தையன், முன்னாள் மாவட்ட செயலாளர் கு.ஜோதி உள்ளிட்ட 48 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட...