×

காலநிலையில் திடீர் மாற்றம் ஊட்டியில் கடும் குளிர்

ஊட்டி,ஆக.7:  ஊட்டி மற்றும் குந்தா பகுதியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு காற்று வீசி  வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் இரவு நேரங்களில் சுற்றுலா  பயணிகள் வெளியே வரவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  ஆண்டு தோறும்  மே மாதம் இறுதி வாரத்தில் துவங்கி நவம்பர் மாதம் வரை ஊட்டியில் சூறாவளி  காற்றுடன் கூடிய கன மழை பெய்வது வழக்கம். இம்முறை ஜூன் மாதம் பெய்ய வேண்டிய  தென்மேற்கு பருவ மழை குறித்த காலத்தில் துவங்கி இரு மாதங்கள் கொட்டி  தீர்த்தது. மேலும், பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் அவ்வப்போது கன மழை  தொடர்ந்து பெய்து வருகிறது.  இந்நிலையில், நீலகிரி  மாவட்டத்தில் ஊட்டி மற்றும் மஞ்சூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை  குறைந்து வெயில் அடித்து வந்தது. இதனால், பொதுமக்கள் இயல்பு நிலைக்கு  திரும்பினர். மேலும், குளிரும் குறைந்து காணப்பட்டது. ஆனால் கடந்த மூன்று  நாட்களுக்கு மேலாக ஊட்டி மற்றும் மஞ்சூர் பகுதிகளில் சூறாவளி காற்று வீசி  வருகிறது.  காற்று வேகத்துடன் வீசுவதால், குளிரும் அதிகரித்துள்ளது.  பொதுவாக ஆடி மாதம் துவங்கினாலே காற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்படும்.  ஆனால், கடந்த 15 நாட்களாக காற்று வீசாத நிலையில், தற்போது பலத்த சூறாவளி  காற்று வீசுவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  தொடர்ந்து இது போன்று  காற்று வீசினால், சாலையோரங்களில் உள்ள மரங்கள் மற்றும்  குடியிருப்புக்களுக்கு அருகேயுள்ள மரங்கள் விழுந்து விபத்து ஏற்படும்  அபாயமும் நீடிக்கிறது. சில சமயங்களில் காற்றுடன் லேசான மழையும் பெய்வதால்,  பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள்  வருவது பெரும்மாளவு குறைந்த போதிலும் கடும் குளிர் வாட்டி வருவதால் தற்போது  வரும் ஒரு சில சுற்றுலா பயணிகளும் இரவு நேரத்தில் வெளியே வரவே அச்சப்படும்  நிலை ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி