×

பாண்டியர் காலத்தில் செயல்பட்ட தமிழ்ச்சங்கம் கண்டுபிடிப்பு

ஈரோடு,ஆக.7: ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவிற்குட்பட்ட திங்களூரில் பூமணசாமி கோவிலில் தமிழ்செப்பேடு இருந்துள்ளது. இந்த தமிழ் செப்பேடு குறித்து கல்வெட்டு ஆய்வாளர் புலவர் இராசு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில் பாண்டியர் காலத்தில் திங்களூரில் தமிழ்சங்கம் இருந்த விபரங்கள் அதில் தெரிய வந்துள்ளது.  இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர் புலவர் இராசு கூறியதாவது: திங்களூர் பூமணசாமி கோவில் நிர்வாகிகளிடம் உள்ள செப்பேட்டை ஆய்வு செய்தபோது அதில் திங்களூரை சந்திரபுரி என அழைத்துள்ளனர். இங்குள்ள சிவன்கோவிலை சந்திரபுரீசுவரர் என்றும், சமணகோவிலுக்கு சந்திரவசதி என்ற பெயர் இருந்துள்ளது. திங்களூரின் 4 திசை எல்லைகளும் செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது. தெற்கு எல்லையாக தென்னரசு, மேற்கு எல்லையாக முக்குக்கல், வடக்கு எல்லையாக வடதுரத்தி,கிழக்கு எல்லையாக ரத்தக்காளி என குறிப்பிடப்பட்டுள்ளது.

திங்களூரில் உள்ள அதிசயமாகவும், முக்கிய இடங்களாகவும் ஐந்தலைநாகம், ஆடவெண்சாரை, தவளைக்கல், சந்திரலிங்கம், சடைப்பனை, பூமநதி, ஐங்கரன், வீமன்கிணறு, வெண்டாமரைக்குளம், ரணமுகபூதம், செந்தமிழ்ச்சங்கம், காணாச்சுனை, கருநொச்சி, தெப்பவாலி, கோட்டை, உப்பரிகை, பன்னகசாலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த செப்பேடு மூலமாக பாண்டியர் காலத்தில் திங்களூரில் தமிழ்ச்சங்கம் இருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், அந்த செப்பேட்டில் திங்களூரில் சந்திரசேகரசாமி, பெரியநாயகியம்மன், கல்யாண சுப்பிரமணியர், நட்டூர் அழகபெருமாள், குண்டத்து காளியம்மன், புஷ்பநாதசாமி, அங்காளம்மன், மாரியம்மன், முத்து விநாயகர் கோவில்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த செப்பேட்டில் திங்களூர் அசோகிவன பாறையில் வேட்டுவர் காவிலியன் மேய்த்த பசு பால் சுரந்த அதிசயமும் நடந்துள்ளது.இதுபற்றி அறிந்த அதிவீரபாண்டியன் காளியம்மனுக்கு கோவில் கட்டி சிப்பந்திகள் நியமித்து சித்திரதேர் நடத்த ஏற்பாடு செய்து 150 ஏக்கர் நிலம் பூமன் கோவிலுக்கு விடப்பட்டது. பூமனின் பிற்கால சந்ததியரான மற்றொரு பூமன், காளி, பழனி ஆகியோருக்கு திங்களூர் கோவில்களில் கார்த்திகை தீப விளக்கு ஏற்றும் உரிமை அளித்துசிறப்பு மரியாதை செய்து 30 வள்ள பூமி (120 ஏக்கர்) மானியம் அளித்ததாகவும் அந்த செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு புலவர் இராசு கூறினார்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...