×

சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது

கோவை, ஆக.7: தமிழகத்தில் மழை ஓய்ந்துள்ளதால் சின்ன வெங்காயம் வரத்து கடந்த 2 வாரமாக அதிகரித்துள்ளது. இதனால் உழவர் சந்தையில் கிலோவிற்கு ரூ.17 குறைந்து ரூ.38க்கும், சில்லரை விற்பனை  கடைகளில் கிலோவிற்கு ரூ.25 குறைந்து, ரூ.45க்கு விற்கப்படுகிறது. கோவை மொத்த காய்கறி மார்க்கெட்டிற்கு சின்னவெங்காயம் சத்தியமங்கலம், ராசிபுரம், நாமக்கல், துரையூர், விளாத்திகுளம் மற்றும் கர்நாடகாவிலுள்ள குண்டல்பேட்டை, சாம்ராஜ்நகர் மற்றும் தாளவாடி ஆகிய பகுதிகளில் இருந்து வருகிறது. மே மாதம் வரை வரத்து சீராக இருந்தது. கடந்த 2 மாதமாக பெய்த மழையால் விவசாயிகள் இருப்பு வைத்துள்ள வெங்காயம் அழுகியதால் வரத்து குறைந்து, விலை உயர்ந்தது. கடந்த ஜூலை 20ம் தேதி விலை அதிகபட்சமாக உயர்ந்து காணப்பட்டது. அன்று மொத்த விற்பனை மார்க்கெட்டில் கிலோ ரூ.50 வரையும், உழவர் சந்தைகளில் ரூ.55 வரையும், சில்லரை விற்பனை நிலையங்களில் ரூ.70 வரையும் விற்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 வாரமாக மழை ஓய்ந்ததால், சின்னவெங்காயம் வரத்து அதிகரித்து, விலை படிப்படியாக குறைய துவங்கியது.
கடந்த மாத இறுதியில் விலை சரிந்து, உழவர் சந்தையில் கிலோ ரூ.45க்கும், சில்லரை விற்பனை நிலையத்தில் ரூ.55க்கும் விற்கப்பட்டது. பின்னர், கடந்த 6 நாட்களாக விலை தினசரி சரிந்து வந்தது. நேற்று உழவர் சந்தையில் ரூ.38க்கும், சில்லரை விற்பனையில் ரூ.45 வரையும் விற்றது.
 கடந்த 2 வாரத்தில் உழவர் சந்தையில் கிலோவிற்கு ரூ.17 குறைந்து ரூ.38க்கும், சில்லரை விற்பனை  கடைகளில் கிலோவிற்கு ரூ.25 குறைந்து, ரூ.45க்கு விற்கப்படுகிறது. வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், வரும் நாட்களில் விலை மேலும் குறையும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பெரிய வெங்காயம்: கடந்த 2 மாதமாக பெரிய வெங்காயம் வரத்து வட மாநிலங்களில் இருந்து சீராக உள்ளது. இதனால் உழவர் சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.19க்கும், சில்லரை விற்பனை நிலையங்களில் பெரிய வெங்காயம் ரூ.25 வரையும் விற்கப்படுகிறது.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்