×

கரும்புகடை-நஞ்சுண்டாபுரம் இணைப்பு சாலை திட்டத்தை கைவிட கோரி கலெக்டரிடம் மனு

கோவை, ஆக. 7: கோவை கரும்புக்கடை-நஞ்சுண்டாபுரம் இடையிலான இணைப்பு சாலை திட்டத்தை கைவிட கோரி, சாரமேடு பகுதி மக்கள் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமையில் நேற்று நடந்தது. கரும்புகடை சாரமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டவர்கள்  இணைப்பு சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: சாரமேடு பகுதியில் கடந்த 1970ம் ஆண்டு முதல் பட்டா பெற்று குடியிருந்து வருகிறோம். இந்நிலையில், உக்கடம் மேம்பாலம் பணி காரணமாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இணைப்பு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 இந்த இணைப்பு சாலை கரும்புகடை முதல் நஞ்சுண்டாபுரம் வரை 6 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக, இப்பகுதியில் உள்ள 300 குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஏற்கனவே, உள்ள சாலைகளை மேம்படுத்தினால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை அரசிடம் ஒப்படைப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர். எம்.எஸ்.எம்.இ சட்ட மசோதவை மறுபரிசீலனை செய்ய கோரி மனு: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள எம்.எஸ்.எம்.இ சட்ட மசோத சிறு, குறு தொழில்களை கடுமையாக பாதிக்கும் எனவே, அதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட சிறு, குறு தொழில் அமைப்புகள் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.

மனுவில், மத்திய அரசு கடந்த மாதம் 23ம் தேதி எம்.எஸ்.எம்.இ., சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே, ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு முன்வைத்துள்ள இந்த சட்டத்திருத்தம் சிறு,குறு தொழில்களை கடுமையாக பாதிக்கும். இதில், சிறு தொழிலாக பதிவு செய்ய உச்சவரம்பு 225 கோடி ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. தற்போது சிறு தொழிலுக்கு ரூ.75 கோடி ரூபாய் உச்சவரம்பு போதுமானது. சிறு, குறு நிறுவனம் என வகைப்படுத்துவதை விற்று முதல் (டேன்ஓவர்) மாறுகின்ற அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டுமா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை மத்திய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்து இருந்தனர்.

 

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு