×

வடமாநில தொழிலாளி குத்திக் கொலை

அவிநாசி, ஆக.7: மேற்கு வங்க மாநிலம் பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமதுரோணி (34). இவர், திருப்பூர் வஞ்சிபாளையம் ரோடு கணியாம்பூண்டி பகுதியில் உள்ள குடியிருப்பில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பனியன் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.இவரது குடியிருப்பு அருகே வடமாநில தொழிலாளர்கள் பலர் வசித்து வருகின்றனர். நேற்று இரவு கணியாம்பூண்டி பேக்கரி அருகில் முகமதுரோணி உடலில் காயங்களுடன் இறந்துகிடந்தார். அவரது மார்பு பகுதியில் கத்தியால் குத்திய காயம் இருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் வடக்கு போலீஸ் இணை கமிஷனர் அண்ணாதுரை, அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் ரோணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், முன்விரோதம் காரணமாக பனியன் தொழிலாளர்களிடையே மோதல் ஏற்பட்டு ரோணி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது: முகமதுரோணி  பனியன் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வந்து வேலைக்கு சேர்த்துவிடுவார். இதேபணியில், மேற்கு வங்கத்தை சேர்ந்த முகமது சைபிள் என்பவரும் ஈடுபட்டு வந்தார். இருவருக்கும் ஏற்கனவே தொழில் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தொழில் போட்டியால் முகமது ரோணி தகாத வார்த்தைகளால் முகமதுசைபிள் நேரில் சென்று திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகமது சைபிள், கையில் வைத்திருந்த கூர்மையான கத்தியால் முகமதுரோணியின் மார்பில் குத்திக் கொலை செய்ததாக தெரிகிறது. இதற்கு முகமதுசைபிளின் நண்பர் யாசினும் உடந்தையாக இருந்துள்ளார்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.  இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது சைபிள் மற்றும் முகமது யாசின் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு