×

கேர்மாளம் வனச்சரகத்தில் சிறுமகசூல் சேகரிக்க பழங்குடியினருக்கு அனுமதி

சத்தியமங்கலம், ஆக. 7:  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கேர்மாளம் வனப்பகுதியில் கோட்டமாளம், வைத்தியநாதபுரம், சுஜில்கரை, காடட்டி, கேர்மாளம், கெத்தேசால், கானக்கரை, செலுமிதொட்டி உள்ளிட்ட கிராமங்களில் பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் என்பது விவசாயம் மற்றும் வனப்பொருள் சேகரிப்பு முக்கிய தொழிலாகும். வனத்தில் உள்ள தேன், நெல்லிக்காய், கடுக்காய், பூச்சக்காய், சீமார்புல், வேப்பங்கொட்டை, சுண்டைக்காய் உள்ளிட்ட வனப்பொருட்களை சேகரித்து வருமானம் ஈட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனச்சரக அலுவலராக பொறுப்பேற்ற முரளி பழங்குடியினர் வனப்பகுதிக்கு சென்று சிறுமகசூல் சேகரிக்ககூடாது எனக்கூறியதால், பழங்குடியினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பழங்குடியினர் ஒருங்கிணைந்து கேர்மாளம் வனச்சரக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலகத்தில் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் அருண்லால் முன்னிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் இ.கம்யூ., கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ., சுந்தரம், பழங்குடி மக்கள் சங்க தலைவர் கடம்பூர் ராமசாமி, கடம்பூர் மலைவட்டார செயலாளர் ஜடையப்பன் மற்றும் பழங்குடி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில் பழங்குடியினர் தங்களது வாழ்வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முறையிட்டதால், வனப்பகுதியில் வனவிலங்குகள் மற்றும் வனத்திற்கு பாதிப்பு இல்லாமல் சிறுமகசூல் சேகரித்துக்கொள்ளுமாறு துணை இயக்குநர் அருண்லால் கூறினார். இதையடுத்து பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
துணை இயக்குனர் தகவல்

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு