அஜீரணம் 5 காரணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

அஜீரணம் எனப் பரவலாக அறியப்பட்ட நோய்க்கான மருத்துவப் பெயர் டிஸ்பெப்சியா. வயிறு பெரும்பாலும் நிரம்பியது போன்ற உணர்வும் உப்பியது போலவும் இருப்பதே அஜீரணத்துக்கான அடையாளம். பெரும்பாலும் அடிவயிற்றின் மேல் பகுதியிலேயே அஜீரணத்துக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. வயிற்று வலி, ஏப்பம், நெஞ்செரிச்சல், மேல் வயிறு உப்புவது, விரைவில் வயிறு நிரம்பிய உணர்வு, உணவுக்குப் பிறகு அசௌகரியம், குமட்டல், வாந்தி ஆகியவை குடல் இரைப்பை பிரச்சினைக்கான அறிகுறிகளாகும்.

இந்த நிலை சாதாரணமாக இருப்பதுபோல் தோன்றினாலும், அறிகுறிகள் ஆபத்தானதுபோல் தெரியவில்லை என்றாலும், ஆரோக்கியமான, இயல்பான வாழ்க்கைக்கு இவை தடையாக இருப்பதால், அதைக் கவனித்தாக வேண்டும்.

அஜீரணம் ஏற்படுவதற்கு அடிப்படையாக உள்ள அம்சங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை:

1. உணவுப் பழக்கம்: ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக செரிமானம் மோசமடைவது, இரைப்பை குடல் அமைப்பில் சிக்கல்கள் ஏற்பட வழிவகுக்கும். அதிகமாக சாப்பிடுவது, உணவை வேகமாக சாப்பிடுவது, போதுமான அளவு மெல்லாமல் விழுங்குவது, சாப்பிட்ட  உடனேயே படுக்கைக்குச் செல்வது போன்றவை இதற்கான காரணங்கள். காரம், புளிப்பு, எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களும் அஜீரண அபாயத்தை அதிகரிக்கும்.

2. புகைபிடித்தல், மது அருந்துதல்: புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவை பல சுகாதார பிரச்சினைகளுக்குக் காரணமாகக் கருதப்படுகின்றன. புகைபிடித்தல் நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண்களுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது, இது செரிமான பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கிறது.

3. மருந்துகள்: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் வாங்கி உட்கொள்வது செரிமானத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆஸ்பிரின், பாராசிட்டமால் மாத்திரைகள் வயிற்றின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை. பொதுவான வலி நிவாரணிகளும் அஜீரணத்திற்கு மிகவும் ஆபத்தானவை.

4. மருத்துவ நிலைமைகள்: செரிமான அமைப்பில் உள்ள அடிப்படை சிக்கல்களின் வெளிப்பாடாகவும் செரிமான பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படலாம். உணவுக்குழாய் எதிர்க்களிப்பு நோய் (GERD), வயிற்றில் பெப்டிக் அல்சர் புண்கள், பித்தப்பைக் கற்கள் போன்ற நிலைமைகளாலும் அஜீரணக் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

5. வயிற்று செயல்பாடு சார்ந்த அஜீரணம்: வயிற்று செயல்பாடு சார்ந்த அஜீரணம் என்பதற்கு நேரடிக் காரணம் ஏதும் இல்லாத போதும்கூட பிரச்சினை ஏற்படும் நிலை இது. இந்த நிலை பொதுவாக வயிற்று தசைகளின் இயக்கத்தில் ஏற்படும் சில அசாதாரண நிலைமைகளால் ஏற்படுகிறது.

 

அஜீரணத்திலிருந்து விடுபட…

அஜீரணம் ஏற்படுவதற்கு சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, நாம் சாப்பிடும் உணவு சாப்பிடும் முறை மற்றும் தூக்கமின்மை  காரணமாகவும் அஜீரணம் ஏற்படலாம்.

எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் கலந்து ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள்.அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் உணவு சாப்பிட்ட பின் சீரக தண்ணீர் குடித்து வந்தால் அஜீரணம் குணமாகும். வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு மூன்று பெருங்காயம் தூள் கலந்து குடித்தால் அஜீரணக் கோளாறு நீங்கும்.

கறிவேப்பிலை சிறிது சீரகம் மற்றும் ஒரு சிறு துண்டு இஞ்சி இந்த மூன்றையும் ஒரு கிளாஸ் அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி  குடித்து வந்தால் அஜீரணம் நீங்கும்.ஒரு டம்ளர் மோரில் கால் டீஸ்பூன் மிளகு தூள், கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து தினமும் இருவேளை குடித்து வந்தால் அஜீரணம் சரியாகும்.

இஞ்சி டீ பருகலாம். சுக்கு காபியும் நல்ல பலன் தரும்.புதினா, இஞ்சி, சுக்கு, எலுமிச்சை போன்ற ஜீரண ஊக்கிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தினசரி பத்தாயிரம் அடிகள் அல்லது ஒரு மணி நேரம் நடக்க வேண்டும். காலையில் நடக்க வாய்ப்பில்லாதவர்கள், இரவில் நடக்கலாம். தினசரி நடை மிகவும் முக்கியம். இது நம் செரிமானத்தை மேம்படுத்த உதவும். உடற்பயிற்சிகள் செய்யலாம். ஜிம்மில் சென்று அடிப்படையான ஸ்ட்ரெச்சிங்குகள், கார்டியாக் உடற்பயிற்சிகள் போன்றவை செய்வதால் உடலின் வலு அதிகரிக்கும். இதனால் செரிமானத்திறன் கூடும்.

தொகுப்பு : ஜாய் சங்கீதா

Related Stories: