×

தித்திக்கும் தீபாவளி பலகாரங்கள்

நன்றி குங்குமம் தோழி

தீபாவளி வந்துவிட்டாலே முறுக்கு சுடலாமா? அதிரசம் பொரிக்கலாமான்னு லிஸ்ட் போட ஆரம்பிச்சிடுவோம். ஒரு சிலர் அதெல்லாம் எதற்கு எல்லாமே கடைகளில் கிடைக்கிறதுன்னு இருந்திடுவாங்க. என்னதான் கடைகளில் எல்லா பட்சணங்கள் கிடைத்தாலும், உடலுக்கு கெடுதல் தராத வீட்டு உணவுகளுக்கு என்றுமே மவுசுதான். வீட்டிலேயே சுலபமான முறையில் செய்யக்கூடிய பாரம்பரிய தீபாவளி பலகாரங்களை தோழி வாசகிகளுக்காக அளித்துள்ளார் சமையல் கலைஞர் வசந்தா.

தேங்காய்ப்பால் தேன்குழல்  

தேவையானவை:

புழுங்கல் அரிசி - 4 கப்,
பொட்டுக் கடலை - ½ கப்,
உளுந்து - ½ கப்,
பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
துருவிய தேங்காய் - 1 கப்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க.

செய்முறை:

புழுங்கல் அரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து கழுவி உப்பு, தேங்காய் துருவலையும் சேர்த்து கிரைண்டரில் கெட்டியாக நைசாக அரைக்கவும். வெறும் வாணலியில் உளுந்து, பொட்டுக்கடலை இரண்டையும் தனித்தனியாக லேசாக வறுத்து மிக்ஸியில் பொடியாக அரைத்து, அரைத்த புழுங்கல் அரிசியுடன் இந்த பொடியையும் சேர்த்து வெண்ணெய், பெருங்காயத் தூள் கலந்து நன்றாக கலந்து விடவும். தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து பிசையலாம். வாணலியில் எண்ணெய் காயவைத்து தேன்குழல் அச்சில் மாவினை சேர்த்து முறுக்குகளாக பிழிந்து எடுக்கலாம். சுவையான மணத்துடன் மொறு மொறுவென தேங்காய்ப்பால் தேன்குழல் தயார். (ஒரு தட்டில் எண்ணெய் தடவி அளவாக பிழிந்து எடுத்து எண்ணெயில் போட ஒன்று போல முறுக்குகள் அழகாக வரும்.)

கேழ்வரகு லட்டு

தேவையானவை:

கேழ்வரகு மாவு - 1 கப்,
வெல்லம் - 1 கப்,
உடைத்த வறுத்த வேர்க்கடலை - ¼ கப்,
நெய் - ¼ கப்,
உப்பு - சிறிதளவு.

செய்முறை:

கேழ்வரகு மாவை நெய் விட்டு வறுத்து இதனுடன் சிறிது உப்பு, வெல்லத் தூள், உடைத்த வேர்க்கடலை கலந்துக் கொள்ளவும். அடுப்பில் நெய்யை சூடு செய்யவும். நெய் சூடானதும், அதை மாவில் சேர்த்து சின்னச் சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.

குறிப்பு: நெய்யில் வறுத்த தேங்காய் துருவல் அல்லது கொப்பரை சேர்த்தும் இந்த லட்டு செய்யலாம். இது சுண்ணாம்பு சத்து மிகுந்த உணவு. குழந்தைகளுக்கு உடல் வலிமையைத் தரும்.

மணியாச்சி முறுக்கு

தேவையானவை:

மைதா - 2 கப்,
அரிசி மாவு - ¼ கப்,
பொடித்த சர்க்கரை - ¼ கப்,
தேங்காய்ப் பால் - 1 கப்,
பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை,
எண்ணெய் பொரிக்க.

செய்முறை:

பேக்கிங் பவுடர், மைதாமாவு இரண்டையும் சேர்த்து சலித்து இதில் அரிசிமாவு, பொடித்த சர்க்கரை, தேங்காய்ப்பால் அனைத்தையும் சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கரைக்கவும். வாணலியில் எண்ணெய் காயவிட்டு முறுக்கு அச்சை எண்ணெயில் தோய்த்து எடுத்து அதில் முறுக்கினை பிழிந்து அப்படியே மோல்டோடு எண்ணெயில் விடவும். பாதி வெந்ததும் லேசாக தட்டினால் முறுக்கு எண்ணெயில் விழுந்து விடும். பின் மோல்டை எடுத்து விடவும். முறுக்கை திருப்பி உடையாமல் வெந்து இருபுறமும் மொறு மொறுவென எடுக்கவும். சிறு தீயில் வேகவிடவும்.

(மணியாச்சி முறுக்கு அச்சு பாத்திரக் கடைகளில் கிடைக்கும்). இனிப்பு, தேங்காய்ப்பால் சுவையுடன் பிரமாதமாக இருக்கும் முறுக்கு.

நாட்டுக் கம்பு தேங்காய் பர்ஃபி

தேவையானவை:

கம்பு மாவு - 1 கப்,
தேங்காய் துருவல் - 1 கப்,
கருப்பட்டி - 1½ கப்,
நெய் - ¼ கப்,
ஏலத்தூள்,
கசகசா,
குங்குமப் பூ - தலா சிறிதளவு.

செய்முறை:

கருப்பட்டியை நீரில் கரைத்து வடிகட்டி, ஏலத்தூள், கம்புமாவு, கசகசா, குங்குமப்பூ சேர்த்து அடுப்பில் வைத்து, சிறு தீயில் கிளற வேண்டும். மாவு நன்கு சுருண்டு கெட்டியாகும் சமயத்தில் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறி கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் சிறிது தேங்காய் துருவலை பரப்பி அதன் மேல் கிளறிய கலவையை கொட்டி, சமமாக தட்டி மேலேயும் தேங்காய் துருவலை பரப்பவும். ஆறியதும் துண்டுகள் போடவும். (கருப்பட்டிக்கு பதில் வெல்லமும் சேர்க்கலாம். இரும்புச் சத்து நிறைந்த ஸ்வீட் இது.)

கவுனி அரிசி அல்வா

தேவையானவை:

கவுனி அரிசி - 1 டம்ளர்,
தேங்காய் - 1 கப்,
நாட்டு சர்க்கரை - 1 கப்.

செய்முறை:

கவுனி அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். கனமான பாத்திரத்தில் 2½ கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து அதில் கவுனி அரிசியை கொட்டி நன்றாக வேகவிடவும். வெந்ததும் அதை வடிக்காமல் இறக்கி வைக்கவும். இதனுடன் தேங்காயைத் துருவி சேர்க்கவும். தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் நெய்யில் அதை சிவக்க வறுத்து சேர்க்கவும். கடைசியாக நாட்டு சர்க்கரையையும் சேர்த்துக் கிளறவும். (பெண்கள் இடுப்புக்கு வலுவூட்டும் உணவு.)

சீட்ஸ் போளி

தேவையானவை:

கோதுமை மாவு,
மைதா மாவு - தலா ½ கப்,
பூசணி,
வெள்ளரி விதைகள் - ½ கப்,
ஏலப்பொடி - 1 ஸ்பூன்,
நெய்,
எண்ணெய் - தேவைக்கு.
கடலைப்பருப்பு - 1 கப்,
தேங்காய் துருவல் - ¼ கப்,
வெல்லம் - 1 கப்.

செய்முறை:

மாவுகளை சலித்து சிறிது கேசரி பவுடர் சேர்த்து சிறிது எண்ணெய், தண்ணீர் விட்டு நன்கு பிசையவும். கடலைப்பருப்பை வேகவைத்து எடுத்து, நெய் விட்டு உலர் விதைகளை வறுத்து, வெந்த பருப்புடன் வறுத்த விதை, ஏலப்பொடி, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து அரைத்து கெட்டி பூரணமாக கிளறி எடுத்து, பிசைந்த மாவில் சிறு உருண்டைகளை உள்ளே வைத்து வாழை இலையில் தட்டி தோசைக்கல்லில் நெய்விட்டு சூடானதும் பிரட்டி வேகவைத்து பரிமாறவும்.

கார்ன் ப்ளேக்ஸ் மிக்ஸர்

தேவையானவை:

வறுக்காத கார்ன் ப்ளேக்ஸ் - 3 கப்,

வேர்க்கடலை - ¼ கப்,
முந்திரி - 10,
பாதாம் பருப்பு - 10,
பொட்டுக்கடலை - 5 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த திராட்சை - 3 ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய் துள் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - பொரிக்க.

செய்முறை:

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கார்ன் ப்ளேக்ஸை பொரித்து எடுத்து வடிகட்டவும். இதே போல பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, திராட்சை, கறிவேப்பிலை என ஒவ்வொன்றாக தனித் தனியாக எண்ணெயில் பொரித்து கார்ன் ப்ளேக்கில் சேர்த்து, சூடாக இருக்கும்போதே உப்பு, மிளகாய்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். கரகரப்பாக ருசியுடன் மிக்ஸர் தயார்.

சிறுதானிய அதிரசம்

தேவையானவை:

சாமை அரிசி,
தினை அரிசி - தலா ½ கப்,
வெல்லம் - ¾ கப்,
வெள்ளை எள் - 2 ஸ்பூன்,
நெய் - 1 ஸ்பூன்,
ஏலத்தூள்,
சுக்குத் தூள் - 1 ஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க.

செய்முறை:

சாமை, தினை அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து உலர்த்தி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி மாவாக்கவும். அடுப்பில் கனமான பாத்திரத்தில் வெல்லத்தில் சிறிது நீர்விட்டு பாகு காய்ச்சி இறக்கி ஏலத்தூள், சுக்குத்தூள், எள் சேர்க்கவும். பின் அரைத்த மாவில் சிறிது சிறிதாக பாகில் சேர்க்கவும். சப்பாத்தி மாவு பதம் வந்தவுடன் மாவு சேர்ப்பதை நிறுத்தி நெய்யை தடவி மாவை அப்படியே வைக்கவும். மறுநாள் அந்த மாவை நெய் தடவிய வாழை இலையில் கொஞ்சம் எடுத்து அதிரசங்களாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் ஒவ்வொன்றாக போட்டு சுட்டு எடுக்கவும். சுவையுடன் சத்து நிறைந்தது.

வரகு கந்தரப்பம்

தேவையானவை:

வரகரிசி - 1½ கப்,
உளுந்து - ¼ கப்,
தேங்காய் - 1 கப்,
வெல்லம் - 1½ கப்,
வெந்தயம் - 1 ஸ்பூன்,
ஏலத்தூள் - 1 ஸ்பூன்,
எண்ணெய் பொரிக்க.

செய்முறை:

வரகரிசி, உளுந்து, வெந்தயம் ஊறவைத்து தேங்காயுடன் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். இதனுடன் வெல்லத்தை சுத்தம் செய்து வடிகட்டி மாவுடன் ஏலத்தூள், வெல்லம் சேர்த்து கரைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கரைத்த மாவை சிறு கரண்டியில் எடுத்து எண்ணெயில் விட்டு இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும். (வரகு அரிசிக்கு பதில் எந்த சிறு தானியத்திலும் செய்யலாம்.)

மூங்தால் அல்வா

தேவையானவை:

பாசிப்பருப்பு - 1 கப்,
காய்ச்சி ஆற வைத்த பால் - 1 கப்,
சர்க்கரை - 1¼ கப்,
நெய் - ¼ கப்,
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை,
ஏலத்தூள் - 1 டீஸ்பூன்,
பொடித்த முந்திரி,
குங்குமப்பூ சிறிது.

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் பாசிப்பருப்பை நீர் விட்டு 5 மணி நேரம் ஊறவைத்து, நன்றாக கழுவவும். பிறகு அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் அரைத்த பாசிப்பருப்பு விழுதை நெய் சேர்த்து, சிறிய தணலில் வைத்து கிளறி பொன்னிறமானதும் பால், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் நன்றாக கிளறி இறக்கவும். இதில் ஏலத்தூள் போட்டு கிளறி, முந்திரிப் பருப்பு, குங்குமப்பூவை தூவி பரிமாறவும். சூப்பர் சுவையுடன் மணமாக இருக்கும்.

பிரட் பாஸந்தி

தேவையானவை:

பால் - 1½ லிட்டர்,
பிரெட் - 5 துண்டுகள் (ஓரம் நீக்கியது),
சர்க்கரை பொடித்தது - 1 கப்,
டூட்டி ஃப்ரூட்டி - அலங்கரிக்க.

செய்முறை:

அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும். அவ்வாறு கொதிக்கும் ேபாது அதன் மேலே ஆடை படியும். அதை எடுத்து தனியே வைக்கவும். பிரட்டை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். பால் பாதியளவு சுண்டிய பிறகு அதில் பொடித்த பிரட் துகல்கள் மற்றும் சர்க்கரையை சேர்த்து கிளறவும். கெட்டிப்பதம் வந்தவுடன் எடுத்து வைத்த பால் ஏடுகளை சேர்த்து கிளறி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடவும். தேவைப்பட்டால் டூட்டி ஃப்ரூட்டி அல்லது பாதாமை சீவி சேர்க்கவும்.

தொகுப்பு: ப்ரியா

Tags :
× RELATED அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ சுய மருத்துவம் வேண்டாம்!