×

பெண்களும் ஃபிட்னஸ் ஸ்போர்ட்ஸ் மாடலாகலாம்!

நன்றி குங்குமம் தொழி

வாழ்க்கை யார் யாருக்கு எப்போது தொடங்கும் என தெரியாது. அதே போல தனக்கிருக்கும் திறமைகள் எப்போது வெளிப்படும், அந்த திறமைகள் என்ன என்று தெரியவே பல காலம் ஆகும். அந்தத் திறமையை கண்டறிந்த அடுத்த கணம் அதை தொடர்ந்து செல்வதுதான் நாம் செய்ய வேண்டிய முதல் வேலை. சொல்லப்போனால் அதுதான் வாழ்க்கையின் முதல் புள்ளி. அப்படித்தான் ஏதோ ஒன்றை தேடிப் போக தன் வாழ்க்கைக்கான துவக்கப் புள்ளியை அடைந்திருக்கிறார் 37 வயதான தமிழ்ச்செல்வி. கல்யாணத்திற்கு பிறகு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்த தமிழ்ச்செல்வி தன் திறமையை அறிந்து கொண்டவுடன் தற்போது ஃபிட்னஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார்.

‘‘என்னோட சொந்த ஊரு கோபிசெட்டிப் பாளையம். பி.காம் படிப்பு முடிஞ்சதும் கல்யாணம். கணவருக்கு கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை என்பதால், அங்கு செட்டிலானேன். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். கல்யாணத்திற்கு பிறகும் நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அந்த சமயத்தில் எனக்கு விபத்து ஏற்பட்டது. அதில் என் காலில் அடிபட்டதால் வேலைக்கு செல்ல முடியாத காரணத்தால் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எந்த வித உடல் உழைப்பும் இல்லாமல் படுத்தே இருந்ததால், என்னுடைய உடல் எடை அதிகமானது. அதனால் கால் சரியானதும், உடல் எடையை குறைக்க தான் உடற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்தேன்.

உடல் எடைய குறைக்க பயிற்சிகள் எடுத்துட்டு இருக்கும் போது தான் இதுலேயே ஏதாவது செய்யலாம்ன்னு யோசிச்சேன். அது குறித்து என்னுடைய பயிற்சி மாஸ்டர் சதீஷ் கிட்ட கேட்டேன். அவர் பாடி பில்டிங் செய்யலாம்னு சொல்லி அதற்கான பயிற்சி அளித்தார். ஆனால் விபத்து ஏற்பட்ட போது காலில் அறுவை சிகிச்சை செய்ததால், என்னால் கால் சம்பந்தமான பயிற்சி எடுக்க முடியல. ஆனால் ஃபிட்னஸ் குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்று மட்டும் என் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.

அதே யோசனையில் இருக்கும் போது தான் ஸ்போர்ட்ஸ் மாடல் குறித்து தெரிய வந்தது. இதுவும் ஒரு வகையான போட்டி சார்ந்தது தான் என்பதால் அதில் கலந்து கொள்ளலாம்ன்னு முடிவு செய்தேன். இது குறித்து வீட்டில் சொன்ன போது, என் கணவர், உடம்பை குறைக்க தானே பயிற்சியில் சேர்ந்த, இப்ப போட்டியில கலந்துக்குறேன்னு சொல்றேன்னு சொன்னார். முதலில் அவர் மறுத்தாலும், என்னுடைய ஆர்வத்தை பார்த்தவர் அந்த போட்டிகளில் கலந்து கொள்ள சம்மதித்தார். அதன் பிறகு நான் முழு மூச்சுடன் ஸ்போர்ட்ஸ் மாடல் போட்டியில் கலந்து கொள்ள ஆரம்பிச்சேன். ஸ்கூல் படிக்கும் இரண்டு பசங்க. அவங்களை பார்த்துக்கணும், இதற்கிடையில் வீட்டையும் கவனிச்சுக்கணும். போட்டியில் கலந்து கொள்வதற்காக எல்லாவற்றையும் அப்படியே விட்டுச் செல்ல முடியாது.

அதுவே எனக்கு பெரிய சவாலாக இருந்தது. தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து, குழந்தைகளுக்கும் கணவருக்கும் உணவு தயார் செய்து, அவங்க பள்ளி மற்றும் வேலைக்கு சென்றதும், 9 மணிக்கு நான் பயிற்சி எடுக்க உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்வேன். தினமும் காலை மற்றும் மாலை இரண்டு மணி நேர பயிற்சி இருக்கும்’’ என்றவர் அந்த போட்டியை பற்றி விவரித்தார்.
‘‘ஃபிட்னஸ் ஸ்போர்ட்ஸ் மாடல் போட்டி மாடல் அழகி போட்டி மாதிரி தான். ஆனால் அது அழகு அறிவு சார்ந்து இருக்கும். இதில் நம்முடைய உடலமைப்பை சரியான அளவுகளில் ஃபிட்டா வைத்திருக்கணும். உடலில் எந்த பகுதியிலும் தசைகள் கூடுதலாக இல்லாமல் சரிவர பயிற்சிகள் எடுக்கணும்.

பாடி பில்டிங் உடலமைப்பை மாற்றுவது. ஆனால் இது உடலமைப்பை பராமரிப்பது. அதனால் எப்போதுமே நம்முடைய உடலமைப்பில் மாற்றம் ஏற்படக்கூடாது. அதற்கு ஒரு நாள் கூட பயிற்சி எடுப்பதை நிறத்தக்கூடாது. அதை விட மிக முக்கியமான விஷயம் உணவு முறையை மாற்றியமைப்பது. நான் நல்லா சாப்பிடுவேன். ஆனா இந்த பயிற்சிக்கு புரோட்டீன் உணவுகள் மட்டுமே எடுத்துக்கணும். தினமும் முட்டை, சிக்கன், காய்கறிகள் என என்னோட உணவு முறைகளை மாற்றிக்கொண்டேன். அதே சமயம் இந்த டயட்டையும் முறையாக  பின்பற்றணும். இப்படி கட்டுப்பாட்டோட இருந்தா தான் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும்.

நான் ஸ்போர்ட்ஸ் மாடலுக்கான பயிற்சி எடுக்க ஆரம்பிச்சதிலிருந்து 6 மாதம் கழிச்சு தென்காசியில் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டேன். மற்ற போட்டிகளை பார்க்கும் போது, இதில் கலந்து கொள்வதற்கான கட்டணம் அதிகம். நான் இப்போது வேலைக்கு செல்வதில்லை என்பதால், என் கணவரின் வருமானம் வீட்டு செலவிற்கே சரியாக இருந்தது. அதனால் அவரிடமும் கேட்க முடியாது. நான் சேமிச்சு வச்சிருந்த பணத்தைக் கொண்டு தான் தென்காசியில் நடைபெற்ற போட்டியில் கலந்துகிட்டேன். இது என்னுடைய முதல் போட்டி என்பதால், நான்காம் பரிசு பெற்றேன். அதுவே எனக்கு பெரிய உத்வேகமா இருந்தது. இன்னும் தீவிரமா பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன்.

கடந்த மே மாதம் ஆசிய அளவிலான போட்டி தாய்லாந்தில் நடைபெற்றது. அதில் பங்கு பெற என் நகைகளை அடமானம் வச்சேன். அதில் மூன்றாம் இடத்தை பிடித்தேன். இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து கலந்து கொண்டே ஒரே பெண் நான் மட்டும் தான். பொதுவா இந்த மாதிரி போட்டிகளில் கலந்து கொள்ள பெண்கள் ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் வீட்டையும் பார்த்துக் கொண்டு தொடர்ந்து பயிற்சி எடுப்பது என்பது முடியாத காரியம்.

வீட்டில் ஆதரவு இல்லை என்றால் இவங்களால் இதை தொடரவும் முடியாது. பல கட்ட போராட்டங்களை கடந்து தான் நான் இந்த போட்டிகளில் பங்கு பெற்று வருகிறேன். அதில் முக்கியமான பிரச்னை பயிற்சிக்கு செலவாகும் தொகை. என்னுடைய தனிப்பட்ட உணவுக்கு மட்டுமே ஒரு நாளைக்கு நான் 700 ரூபாய் செலவு செய்யணும். நான் வீட்டிற்கு சமைத்தது போக எனக்காக தனியா சமைக்கணும். இதை எல்லாம் சமாளித்து தான் ஆகணும். இப்போது நான் உலக அளவில் நடைபெறக்கூடிய ஸ்போர்ட்ஸ் மாடல் போட்டிக்கு தேர்வாகி இருக்கேன். அதற்கான செலவுகள் அதிகம். இது போன்ற போட்டிகளுக்கு அரசு தரப்பில் இருந்து உதவி கிடைச்சா நல்லா இருக்கும். மேலும் பல பெண்கள் போட்டிகளில் கலந்து கொள்ள முன்வருவார்கள்’’ என்றார் தமிழ்ச்செல்வி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

Tags :
× RELATED அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ சுய மருத்துவம் வேண்டாம்!