பாக்டீரியா எதிர்ப்பு…ஓர் அலெர்ட் ரிப்போர்ட்!

நன்றி குங்குமம் டாக்டர்

பாக்டீரியா எதிர்ப்பு என்றால் என்ன?   

பாக்டீரியா எதிர்ப்பு என்பது உடலில் ஆன்டிபயாட்டிக்குக்கு எதிராக போராடும் பாக்டீரியாவின் திறனைக் குறிக்கிறது. பொதுவாக பாக்டீரியாவைக் கொல்ல அல்லது கட்டுப்படுத்த ஆன்டிபயாட்டிக் மருந்து வழங்கப்படுகிறது. பாக்டீரியா எதிர்ப்பு என்பது மருத்துவத் துறையில் உலக அளவில் வளர்ந்துவரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. உடல் ஒரு எதிர்ப்பு பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவுடன், உடல் நினைத்த வகையில் மருந்துக்கு எதிர்வினையாற்றுவதை நிறுத்திவிடுவதால், நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாகிறது. ஆன்டிபயாட்டிக்குக்கு ஏற்படும் இந்த எதிர்ப்பு, எதிர்பார்த்த அளவைவிட பாக்டீரியா அதிகமாக வளர்வதற்குக் காரணமாகிறது.

பல்வேறு வகையான ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு காணப்படும் எதிர்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. குறிப்பிட்ட வகை ஆன்டிபயாட்டிக் மருந்துக்கு எதிர்ப்பு என்பது, எல்லா ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கும் எதிர்ப்பாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அதிகரித்து வரும் பாக்டீரிய எதிர்ப்பை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி, மருத்துவர்கள் தேவையற்று ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்கக் கூடாது. நோயாளிகள் சுயமாக ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

 

ஆன்டியாடிக் எதிர்ப்பு நிகழ்வு

பாக்டீரியா/பூஞ்சையைக் கொல்லத் தயாரிக்கப்படும் ஆன்டிபயாடிக்குகளைத் தாங்கும் திறனைக் கொண்டிருக்கும்போது கிருமிகள் - பூஞ்சைகள் பாக்டீரிய எதிர்ப்புத் திறனைப் பெறுகின்றன. இவை இயற்கையாகவே சில வகை ஆன்டிபயாட்டிக்குகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டவையாக இருக்கலாம். இது இயல்பான எதிர்ப்பு, கற்றுக்கொண்ட எதிர்ப்பு என மற்றொரு வகை உண்டு. சரியற்ற அளவுகளில் ஆன்டிபயாட்டிக் உட்கொள்ளப்படும்போது, பாக்டீரியா கற்றுக்கொண்ட எதிர்ப்புத்திறனைப் பெறும். இந்த நிலையில் மருந்தை எதிர்த்துப் போராடுவதற்கான எதிர்ப்பு வழிமுறைகளைக் கொண்டதாக மாறும் பாக்டீரியாக்கள், நம் உடலில் பெருகத் தொடங்குகின்றன. தொற்றை பெற்றிருப்பவரின் உடலில் எதிர்ப்பு சக்தி குறையும்போது, பாக்டீரிய எதிர்ப்பை வெளிப்படுத்தும் பாக்டீரியா நோயை ஏற்படுத்துகிறது.

   

பாக்டீரியா எதிர்ப்பு நோயைக் கண்டறிதல்

 பாக்டீரிய எதிர்ப்பை ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் காண முடியாது. ஏனெனில், பாக்டீரிய கல்சர் பரிசோதனை இல்லாமல், ஆன்டிபயாட்டிக்குக்கு பாக்டீரியா எதிர்ப்புத் திறன் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியாது. இவற்றை மருத்துவரின் உதவி இருந்தால் ஆரம்ப நிலையில் கண்டறிய முடியும். உடலில் பாக்டீரிய எதிர்ப்பைக் கண்டறிய மருத்துவர்கள் பயன்படுத்தும் வழிகள் இவை:

நுண்ணுயிரியல் கல்சர் முறை- காயம், சிறுநீர் அல்லது தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் பகுதியிலிருந்து மருத்துவர்கள் மாதிரியை எடுப்பதற்கு இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. நுண்ணுயிரியல் ஆய்வகங்கள் நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் சிறிய அளவிலான ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சேர்ப்பதன் மூலம் மருந்துகளுக்கு எதிர்ப்பு உள்ளதா என்பதைக் கண்டறியும். குறிப்பிட்ட ஆன்டிபயாட்டிக் மருந்தால் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படுகிறதா என்பதை இதன் மூலம் கண்காணிக்க முடியும்.

மூலக்கூறு பகுப்பாய்வு முறை - பாக்டீரியா உருவாக்கும் எதிர்ப்பு மரபணுக்களைக் கண்டறிவதன் மூலம் எந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பாக்டீரியாக்களுக்கு எதிராக வேலை செய்கின்றன என்பதைத் தீர்மானிக்க இந்தப் பகுப்பாய்வு முறை மருத்துவருக்கு உதவுகிறது. இந்த சோதனை முடிவு வேகமானது, ஆனால் செலவு மிகுந்தது.பாக்டீரிய எதிர்ப்பு உருவாவதைத் தடுக்க எதிர் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மூலம் சுய சிகிச்சைக்கு நோயாளிகள் முயலாமல், மருத்துவ நிபுணர்களை அணுகுவது பலன் தரும்.

தொகுப்பு : ஜாய் சங்கீதா

Related Stories: