×

குழந்தைகளுக்கான ரத்த அழுத்தம்... தீர்வு என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

முன்பெல்லாம் பெரியவர்களுக்கான நோய்கள் என்பதாக வகைப்படுத்தப்பட்டவை, தற்போது சிறிய குழந்தைகளிடமும் சாதாரணமாக தோன்ற ஆரம்பித்துள்ளன. கெட்டுவிட்ட சுற்றுச்சூழலும், தவறான மருத்துவப் பழக்க வழக்கங்களும் மற்றும் நமது வாழ்க்கை முறையுமே இவற்றுக்கு பிரதான காரணம்.உயர் ரத்த அழுத்த பிரச்சினை தற்போது குழந்தைகளையும் அதிகம் வாட்டும் ஒரு நோயாக மாறிவிட்டது.

விளைவுகள்

உயர் ரத்த அழுத்த பிரச்சனை கொண்ட 75% குழந்தைகள், சோதனைக்கு உட்படுத்தப்படாமலேயே உள்ளனர். இதன்மூலம், அவர்கள் பெரியவர்கள் ஆனதும், இதயம் மற்றும் ரத்த நாளம் தொடர்பான நோய்களுக்கு உள்ளாகின்றனர். உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள ஒருவர், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு மற்றும் இதய நோய் ஆகியவை தாக்குவதற்கான அதிகபட்ச ஆபத்தில் இருக்கிறார்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு, முறையான கவனிப்பிற்கு உட்படுத்தப்படாவிட்டால், மூளை வீக்கம், குழப்பம், கோமா, தீவிர தலைவலி மற்றும் குருட்டுத் தன்மை உள்ளிட்ட மோசமான நிலைகளுக்கு ஆட்படும் ஆபத்து உள்ளது. எனவே, ஆண்டிற்கு ஒரு முறையாகினும், குழந்தைகளுக்கு ரத்த அழுத்த சோதனை
நடத்தப்பட வேண்டும்.

அதிகரிக்கக் காரணங்கள்

இன்றைய சமூகத்தில், குழந்தைகளின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே காரணம்.  உதாரணமாக, அதிகமாக தொலைக்காட்சிப் பார்த்தல், கணினி முன்பாக அதிகநேரம் செலவழித்தல், வீடியோ கேம் விளையாடுதல், ஜங்க் உணவுகளை உண்ணுதல் மற்றும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படும் பானங்களைப் பருகுதல் உள்ளிட்ட பல பழக்கவழக்கங்களால், உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்படுகிறது.

அதேசமயம், தேவைக்கும் குறைவான உடலியக்கம், தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் செய்யாமை, உடல் சார்ந்த விளையாட்டுக்களுக்கு வாய்ப்பில்லாமை உள்ளிட்ட அம்சங்கள் ஒரு குழந்தை குண்டாவதற்கு மட்டுமல்ல, அக்குழந்தை உயர் ரத்த அழுத்த பிரச்சினையை எதிர்கொள்வதற்கும் காரணமாகின்றன.

ரத்த அழுத்த சிக்கலைத் தீர்க்க செய்ய வேண்டியது.குழந்தைகள், நல்ல சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட ஊக்கப்படுத்தப்பட வேண்டும். மேலும் ஜங்க் உணவு மற்றும் சர்க்கரை அதிகம் கலந்த பானங்களை தவிர்க்க வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு உணவுகளை தவறவிடாமல், சரியான நேரத்தில உண்ண வேண்டும். அதுபோல், அதிகநேரம் தொலைக்காட்சி முன்பாகவோ அல்லது கணினி முன்பாகவோ அமரக்கூடாது. தேவையான அளவிற்கு விளையாட வேண்டும்.

தினந்தோறும் நன்கு விளையாட வேண்டும். அதுவே அவர்களுக்கான உடற்பயிற்சி. மேலும், இரவில் நெடுநேரம் கண்விழிக்காமல், தினமும் தேவையான அளவு தூங்க வேண்டும். குழந்தைகளுக்கான நார்மல் ரத்த அழுத்தம் என்பது என்ன?பெரியவர்களை எடுத்துக் கொண்டால், அவர்களின் நார்மல் ரத்த அழுத்த அளவு 120/80 mm Hg) என்பதாக இருக்கும். ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரை, நார்மல் ரத்த அழுத்தம் என்பது, வயது, பாலினம் மற்றும் உயரம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.

எனவே, இதற்கென்று குறிப்பிட்ட அளவீட்டை நிர்ணயிக்க முடியாது. குழந்தையின் ரத்த அழுத்தத்தை அளவிடும் மருத்துவர், அதை reference table -க்கு பொருத்திப் பார்த்து, அது நார்மலா அல்லது அசாதாரணமானதா என்பதை நிர்ணயிக்க வேண்டும்.இந்த ஒப்பீட்டின்போது, 95% விழுக்காட்டிற்கு மேல் இருந்தால், அது உயர் ரத்த அழுத்தமாக கணக்கிடப்படும். உதாரணமாக, ஒரு 5 வயது குழந்தையின் உயரம் 95% விழுக்காட்டில் இருந்தால், 104/65 mm Hg என்பதற்கு மேலான மதிப்பு உயர் ரத்த அழுத்தமாக கருதப்படும்.

குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள் யாவை?

உடல் பருமன், சிறுநீரக கோளாறு, இதய கோளாறு, தூக்கத்தின்போதான சுவாசப் பிரச்சினை உள்ளிட்டவை, குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள். ஒரு குழந்தையிடம் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருக்கிறதென்றால், அதற்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

தொகுப்பு : லயா

Tags :
× RELATED உனக்கு நீயே ஒளி ஆவாய்!