மறைக்கும் சிறுநீர் கசிவு பிரச்சனை ஆபத்தில் முடியும்!

நன்றி குங்குமம் தோழி

உஷார் உஷார்!!

சில குழந்தைகள் ஐந்து வயதிற்கு மேல் ஆகியும் இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்து விடுவார்கள். அதனால் தினமும் காலை எழுந்ததும் அம்மாக்களுக்கு தொல்லையாக இருக்கும். இது இயல்பான ஒன்றுதான். பின் குழந்தைகள் வளர வளர அதுவாகவே சரியாகிவிடும் அல்லது அதனை சரி செய்துவிட முடியும்.அதேபோல, சில பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் வருவது போலவும், அதனை அடக்க முடியாமல் ஒன்று இரண்டு சொட்டு சிந்துவதும் சில நேரங்களில் நடக்கும். இது ஏதோ ஒரு நாளிலோ, ஒரு இரவிலோ இருந்தால் பரவாயில்லை. தினமும் இப்படித்தான் இருக்கிறது என பெண்கள் மனச் சோர்வுக்கே சென்றுவிடுவார்கள்.

இவ்வாறு ஏன் ஏற்படுகிறது, இதனை இயன்முறை மருத்துவம் வழியாக எப்படி எளிதில் சரி செய்யலாம் என்பதனை இங்கே பார்ப்போம்.

இயல்பான முறை...

*நாம் சுவாசிக்க, கண்களை இமைக்க, இருதயம் துடிக்க என எல்லாவற்றிக்கும் தசைகள் இருக்கின்றன.

*அதேபோல சிறுநீர் மற்றும் மலம் கழிக்கவும் தசைகள் உள்ளன. இதுமட்டுமில்லாமல் கர்ப்பப்பை மற்றும் சிறுநீர் பையை தாங்கும் தசைகளும் உள்ளன. அதாவது, நம் இடுப்புப் பகுதியில் தரை (Floor) போல இந்த தசைகள் (Pelvic Floor Muscles) படர்ந்து விரிந்து இருக்கும். இதன் மேல் கருப்பை (ஆண்களுக்கு இதற்கேற்றவாறு மாறும்), பெருங்குடல், சிறுநீர் பை மூன்றும் அமைந்திருக்கும்.

*மேல் சொன்ன உறுப்புகளின் வாய் (ஆசனவாய், கருப்பை வாய், சிறுநீர் பையின் வாய்) இந்த தசைகளை ஊடுருவி கீழே செல்லும்.

*சிறுநீர் பை முழுதும் நிரம்பியதும், நம் மூளைக்கு சமிஞ்சை அனுப்பப்பட்டு, நாம் கழிவறை செல்ல மூளை உத்தரவிடும்.

சிறுநீர் கசிவு...

சிறுநீர் பை முற்றிலும் நிரம்பாமலே சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு, சிறுநீர் அவசரமாக வருவது போல தோன்றி, நம்மை அறியாமல் நாம் கழிவறை செல்வதற்குள் சிறுநீர் கசியும். இதுவே Urinary Incontinence (சிறுநீர் கசிவு).

காரணங்கள்...

*மேலே குறிப்பிட்டுள்ள தசைகள் தளர்வது.

*சிறுநீர் பையில் ஏற்படும் தொற்று நோய்.

*ஏதேனும் நரம்பு மண்டலம் சார்ந்த நோய்கள் (உதாரணமாக, சில வகை பக்கவாதம்).

*சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இவ்வாறு ஏற்படும்.

*மகப்பேறு காலம்.

*மெனோபாஸ் (மாதவிடாய் முற்றிலும் நிறைவடையும் காலம்).

*இடைவிடாத இருமல் மற்றும் தும்மல் சார்ந்த நோய்கள் இருப்பவர்களுக்கும் வரலாம்.

*வயதாவதால் இயல்பாகவே இந்த தசைகளில் தளர்வு ஏற்படலாம்.

*அதிக உடற்பருமன் இருப்பவர்களுக்கு வரக்கூடும்.

*கடினமான சுகப்பிரசவம்.

*குறுகிய கால கர்ப்ப இடைவெளிகள்.

*நாள்பட்ட மலச்சிக்கலுடன் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரிக்கும் போது இவ்வாறு நடக்கலாம்.

*
சிறுநீரை வெளியே அகற்றும் பகுதியில் அடைப்பு.

*சிறுநீர் வெளியேற்றும் பகுதி சுருங்கி இருத்தலால் கூட நிகழலாம்.

அறிகுறிகள்

*இருமும் போதும், தும்பும் போதும் சிறுநீர் கசிவது.

*படுக்கையில் இருந்து கழிவறை செல்வதற்குள் சிறுநீர் அடக்க முடியாமல் கசிவது.

*எப்போதும் போல இல்லாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பது (நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிப்பது இயல்பு).

*சிரிக்கும் போது, உடற்பயிற்சி செய்யும் போது, அதிக எடை உள்ள பொருட்களை தூக்கும் போது, உடலுறவு

கொள்ளும் போது என சாதாரண சந்தர்ப்பங்களில் கூட சிறுநீர் கசிவது.

தீர்வுகள்...

*சிறுநீர் கசிவுடன் காய்ச்சல், சிறுநீர் மஞ்சள் நிறமாக இருப்பது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வலி போன்றவை இருந்தால் ஏதேனும் சிறுநீர் தொற்று நோய் ஏற்பட்டு இருக்கிறது என அர்த்தம். எனவே இவ்வாறு அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள பொது மருத்துவரை பார்த்து தொற்றுக்கான மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். தொற்றினால் ஏற்படும் சிறுநீர் கசிவு என்றால் குணமாகிவிடும்.

*இப்படி வேறு அறிகுறிகள் இல்லை எனில் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுக வேண்டும். அவர் முழுதும் பரிசோதனை செய்து, உடற்பயிற்சிகள் பரிந்துரைப்பார்.

உடற்பயிற்சி...

*அனைவருக்கும் பொதுவான உடற்பயிற்சியை இப்போது பார்க்கலாம். சிறுநீர் வந்தால் நமக்கு இயல்பாகவே அடக்கத் தெரியும் அல்லவா, அவ்வாறு உட்கார்ந்தோ, படுத்தோ சிறுநீர் மற்றும் மலம் வருவதை அடுக்குவது போல செய்ய வேண்டும். பின் ரிலாக்ஸ் ஆகுங்கள். பின் மீண்டும் தொடர வேண்டும். இவ்வாறு 15 முதல் 30 தடவை தினமும் செய்ய வேண்டும். இது எளிமையான உடற்பயிற்சி. ஆனால் சிறுநீர் மற்றும் மலம் வரும் நேரத்தில் இதனை கண்டிப்பாக செய்யக் கூடாது.

சிறுநீர் கழித்தவுடன் வேண்டுமானால் செய்யலாம். அதேபோல, மூச்சை அடக்கி இந்த பயிற்சியை செய்யக் கூடாது. இதுவும் ஆபத்து ஆகிவிடும்.இதற்கு மேலும் உடற்பயிற்சிகள் உள்ளன. ஆனால் அவை ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதால் குறிப்பிடவில்லை. அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி முழுப்பயன் பெறுங்கள்.

ஆலோசனை...

*30 முதல் 60 சதவிகித பெண்கள் வாழ்வில் ஒரு முறையேனும் இந்த பாதிப்பால் அவதியுறுகிறார்கள்.

*நீண்ட நாட்களாக இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறுநீர் தொற்று, தொடைகளில் தடிப்புகள் (rashes), மன அழுத்தம், இரவில் அவசரமாக இருட்டில் ஓடுவதால் கீழே விழுந்து ஏற்படும் காயங்கள் என விளைவுகள் உண்டாகலாம்.

*சில வகை உணவுகள், மருந்துகள் எடுத்துக் கொண்டால் அவசரமாகவும், அடிக்கடியும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும். உதாரணமாக, அதிக இனிப்பு, காரம் மிக்க உணவுகள், வைட்டமின் சி அதிகமாக எடுத்துக்கொள்வது, சாக்லெட், மது போன்றவை எடுத்துக்கொள்வது. இதனால் பயப்பட வேண்டாம். அடுத்த நாளில் சரியாகிவிடும்.

*இருமும் போது ஏற்படுகிறதா? அவசரமாக போகவேண்டும் என்று தோன்றிய உடனேயே கசிகிறதா? அடிக்கடி சிறுநீர் போகவேண்டும் போல் உள்ளதா? பகலில் எத்தனை முறையும், இரவில் எத்தனை முறையும் சிறுநீர் கழிக்கிறோம்? ஒவ்வொரு முறையும் எவ்வளவு சிறுநீர் கழிக்கிறோம்? இரவு தூக்கம் எப்படி உள்ளது, சிறுநீர் கழிக்க வேண்டிய சூழ்நிலையினால், தூக்கம் களைகின்றதா என்று நமக்கு நாமே ஆராய்ந்து பட்டியல் போட்டுக் கொள்வது சிறந்தது.

ஆகவே இது ஏதோ வெளியில் சொல்லக் கூடாத பிரச்சனை எனக் கருதி பாதிப்பின் வீரியத்தை பெரிது படுத்தாமல், வீட்டில் உள்ளவர்களிடம் கலந்துரையாடி சரியான மருத்துவ முறைகளை தேர்ந்தெடுப்போம்; பின்பற்றுவோம். எல்லாம் எளிதில் சரியாகும்.

Related Stories: