×

முத்தான மூலிகை சமையல் 3

நன்றி குங்குமம் டாக்டர்

மழைக்காலம் தொடங்கிவிட்டது.  சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை அணைவருக்கும் சளித் தொல்லையும் காய்ச்சலும்  பரவிவருகிறது. அதிலிருந்து தற்காத்துக் கொள்ள, நாம் உண்ணும்  உணவில் சற்று கூடுதல்  கவனம்  செலுத்தினால் போதும் ஜலதோஷத்தில் இருந்தும் காய்ச்சலில் இருந்தும்  விடுபடலாம். அந்த வகையில் சில மூலிகைச் சமையலை பார்ப்போம்:

முள்ளு முருங்கை அடை

தேவையானவை:

இட்லி அரிசி - 1 கப்
 உளுந்து  - கால் கப்
முள்ளு முருங்கை இலை - 20
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 20
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:
அரிசி மற்றும் உளுந்தைக் களைந்து தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். முள்ளு முருங்கை இலையை நடுவில் உள்ள நரம்பை நீக்கி விட்டு, சிறு சிறு துண்டுகளாகப் பிய்த்து வைக்கவும். பின்னர், ஊறிய அரிசி, முள்ளு முருங்கை இலை, ஜீரகம், மிளகு, உப்பு சேர்த்துக் கெட்டியான  தோசை மாவு பதத்தில்  அரைத்து எடுக்கவும். பின்னர்,  தோசைக் கல்லில் சின்ன சின்ன அடைகளாக  ஊற்றி எடுத்தால்  இரண்டு  பக்கமும்  நல்ல  சிவக்க சுட்டு எடுத்தால் முள்ளு முருங்கை இலை  அடை தயார்.

பலன்கள்:  முள்ளு முருங்கை இலையில்  சுண்ணாம்புசத்து,  நார்சத்து,  இரும்பு சத்து  அதிகம் உள்ளது. மாதவிடாயின் போது உண்டாகும் அடிவயிற்று வலியைப் போக்கும் சக்தி இந்த இலைக்கு உண்டு. மேலும்

பிரண்டைத் துவையல்

தேவையானவை:

பிரண்டை - ஒரு கட்டு
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 10
புளி - சிறிய எலுமிச்சை அளவு
பூண்டு - 10 பற்கள்
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1  தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பிரண்டையை நன்கு கழுவி சுத்தம் செய்து, தோலை உரித்து உள்ளிருக்கும் தண்டுப் பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், பிரண்டையை நன்கு வதக்கி எடுத்து வைக்கவும்.  மீண்டும் சிறிது நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய்வற்றல், பூண்டு அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கி, ஆறிய பின் வதக்கிய பிரண்டை, புளி சேர்த்து அரைத்து எடுத்தால், பிரண்டைத் துவையல் தயார்.

குறிப்பு : பிரண்டை அரிக்கும் தன்மை உள்ளதால் அதனை சுத்தம் செய்யும்போது, கையில் சிறிதளவு நல்லெண்ணெய்யை தடவிக் கொள்ளவும்.

பலன்கள்: 
பிரண்டை உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்குச் சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்.

ஓமவல்லி  ரசம்

தேவையானவை:

ஓமவல்லி இலை - 6
மிளகு -  1 தேக்கரண்டி
துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தக்காளி - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் மிளகு, துவரம் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். தக்காளியை வேகவைத்து அதில் அரைத்த பொடியைப் போட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர்,  வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து வழக்கமான ரசம் போல் செய்யவும். பின்னர் அதனை இறக்கி ஓமவல்லி இலைகள் மற்றும் கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு 5 நிமிடம்  மூடிவைத்துவிட்டு,  சிறிது நேரம் கழித்து  பரிமாறவும்.  ஓமவல்லி ரசம் தயார்.

பலன்கள்:  சளித்தொல்லை மற்றும் மூக்கடைப்பு, மார்பு சளி  போன்றவற்றை  குணப்படுத்தும். மேலும், அஜீரணத்தால் ஏற்படக்கூடிய வயிற்று வலி மற்றும் வாந்தியை போக்க வல்லது. உணவு ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால் கூட அதனை ஓமவல்லி தீர்க்கும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. அதோடு சிறுநீரகப் பிரச்சனை, சிறுநீரகத் தொற்று, நீர்க்கடுப்பு ஆகியவற்றை போக்க பெரிதும் உதவுகிறது.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

Tags :
× RELATED அனஸ்வரா ராஜன் ஃபிட்னெஸ்