நலம் சேர்க்கும் வைட்டமின் ஈ உணவு ரகசியங்கள்

நன்றி குங்குமம் டாக்டர்

உணவியல் நிபுணர் வண்டார்குழலி

வைட்டமின் ஈ கண்டுபிடிப்பு

கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களுள் ஒன்றான வைட்டமின் ஈ சுமார் 100 வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. 1922 ஆம் ஆண்டு, ஈவன்ஸ்  மற்றும் பிஷப் என்ற இருவரால் இனப்பெருக்கத்துக்குத் தேவையான உயிர்ச்சத்துக்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பன்றி இறைச்சியிலிருந்து எடுக்கப்பட்ட உணவைக் கொடுத்து வளர்த்த எலிகளுக்கு, சத்துப் பற்றாக்குறையால், இனப்பெருக்கத்தில் சிக்கல் ஏற்பட்டபோது, தானியங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஒருவகைக் கொழுப்புப் பொருளை உணவாகக்கொடுத்து வளர்த்தனர்.

ஏற்கெனவே ஏற்பட்ட குறைபாடு சரிசெய்யப்பட்டு, இனப்பெருக்கமும் சரியாக நடந்ததால், அந்த குறிப்பிட்ட பொருள் இனப்பெருக்கத்துக்கு உதவிடும் சிறப்புப்பொருளாகக் கருதப்பட்டு, 1925 ஆம் ஆண்டில், வைட்டமின் ஈ என்று பெயர் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1969 ஆம் ஆண்டில் டோக்கோபெரால் என்று பெயரிடப்பட்டு, 1969 ல் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையால் வைட்டமின் ஈ அத்தியாவசிய உயிர்ச்சத்தாக அங்கீகரிக்கப்பட்டது.

வைட்டமின் ஈ - வகைகள்

வைட்டமின் ஈ என்பது பொதுவான ஒரு வார்த்தை அல்லது பெயர் என்றாலும், அதில் எட்டு விதமான வகைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறுசிறு வேதியியல் மாற்றங்களைக் கொண்டுள்ளதால், அந்த அமைப்பைப் பொருத்து அவற்றின் செயல்பாடும் சிறிதளவில் வேறுபடுகிறது. இந்த எட்டு வகைகளில், நான்கு டோகோபெரால் (Tocopherols) என்ற அமைப்புடனும், மீதம் இருக்கும் நான்கும் டோகோடிரினால் (Tocotrienols) என்ற அமைப்பாகவும் உள்ளது. இவற்றுள் ஆல்பா டோகோபெரால் என்னும் வகை அதிக செயல்பாட்டுத்திறனுடன் இருக்கிறது.

வைட்டமின் ஈ - முக்கியச் செயல்பாடுகள்

ஒவ்வொரு வைட்டமின்னும் ஏதேனும் ஒரு முக்கிய உறுப்பின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் நிலையில், வைட்டமின் ஈ யின் பிரதான செயல்பாடு ஆன்ட்டிஆக்ஸிடன்ட்டாக இருப்பதுதான் என்றால் மிகையாகாது. கொழுப்பில் கரையும் வைட்டமின்னாக இருப்பதால், கொழுப்பு செல்களைப் பாதுகாத்து, அவை தீங்கு விளைவிக்கும் அல்லது நோயை ஏற்படுத்தும் ஆபத்தான காரணிகளாக மாறுவதைத் தடுக்கிறது.

உடலுக்கு ஒவ்வாத சுற்றுச்சூழல் காரணிகள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற தீங்கு விளைவிக்கும் காரணிகளால், உடலின் செல்களுக்கு ஏற்படும் தொடர்ச்சியான ஒரு நுண்ணிய தொடர்பைத் துண்டித்து, பாதுகாப்பு அளிக்கிறது. சில நேரங்களில், வைட்டமின் ஏ மற்றும் அதன் முன்பொருளாக இருக்கும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் சிறுகுடலில் அழியாமல் காக்கிறது.

ஒருவரின் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தி சரியாக இருப்பதற்கு வைட்டமின் ஈ யும் காரணம். செல்களின் உள் அமைப்புகளாக இருக்கும் மைட்டோகான்டிரியா, நியூக்ளிக் அமிலம், புரதங்கள் போன்றவற்றின் வேதிவினை நிகழ்வுகளுக்கு வைட்டமின் ஈ மிகவும் அத்தியாவசியமானது. முதுமைக்குக் காரணமாக இருக்கும் லிப்போபியூசின் (Lipofuscin) என்ற ஒருவகை நிறமியின் உற்பத்தியைக் குறைத்து, கட்டுக்குள் வைக்கிறது.

இதனால், இளவயதிலேயே முதுமைத் தன்மை அல்லது முதுமையில் தீவிர நோய்கள் ஏற்படுதல் போன்றவற்றையும் தடுக்கிறது. சமீபத்திய புதிய ஆய்வுகளில், நுரையீரல், செரிமான உறுப்புகள் மற்றும் பிற உள்ளுறுப்புகளில், பரம்பரையாகவோ அல்லது பிற காரணிகளாலோ ஏற்படும் cystic fibrosis என்னும் சிதைவு நோயை, வைட்டமின் ஈ உணவுகளையும், வைட்டமின் ஈ சேர்க்கப்பட்ட மருந்துணவுகளையும் கொடுப்பதன் மூலம் குணப்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வைட்டமின் ஈ - தேவையும், உணவுகளும்

இந்தியர்களைப் பொருத்தவரையில், பொதுவாகவே ரத்தத்தில் இருக்கும் 0.5 மில்லிகிராம் வைட்டமின் ஈ போதுமானது. என்றாலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரைப்படி, 0.8 மில்லிகிராம், ஒரு நாளைக்குத் தேவையான அளவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. கொழுப்புச் சத்துடன் குடல் மூலம் உட்கிரகிக்கப்பட்டு, கல்லீரல், கொழுப்பு செல்கள் மற்றும் தசைகளில் வைட்டமின் ஈ சேமித்து வைக்கப்படுகிறது என்றாலும், அதிக அளவில் கொழுப்பு செல்களிலேயே சேமித்து வைக்கப்படுகிறது.

இதனால், சிலருக்கு, பலநாட்களுக்கு வைட்டமின் ஈ குறைவான உணவுப்பொருட்களே கொடுக்கப்பட்டாலும், அவரின் ரத்த பிளாஸ்மாவில் இருக்கும் 0.6 முதல் 1.6 மில்லிகிராம் அளவிலான வைட்டமின் ஈ, தீவிர குறைபாட்டு நிலையை ஏற்படுத்தாமல் காக்கிறது. ஆனாலும், அதை நீடிக்க விடாமல், வைட்டமின் ஈ நிறைவான உணவுகளை எடுத்துக்கொள்வதே சாலச்சிறந்தது.

அசைவ உணவுகளில் கொழுப்பு இருப்பதால், அதில் வைட்டமின் ஈ யும் இருக்கிறது. ஆனாலும், தாவர வகை உணவுகளில், பாதாம், முந்திரி, பிஸ்தா, ஆலிவ், கடலை, எள் போன்றவற்றில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது என்பது மட்டுமல்லாமல், எளிதில் செரித்து உடலுக்குள் உட்கிரகிக்கப்படும் தன்மையுடையது. கோதுமை எண்ணெயில் மட்டும் 100 கிராமுக்கு, 120 மில்லிகிராம் வைட்டமின் ஈ இருக்கிறது.

கடுகு எண்ணெய்யில் 86.2 மில்லி கிராம் இருக்கும் நிலையில், கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய்யில் முறையே 35.9 மற்றும் 53.1 மில்லி கிராம் வைட்டமின் ஈ உள்ளது. ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்படும் வைட்டமின் ஈ மற்றும் செலினியம் என்ற இரண்டு சத்துக்களுக்கும் ஒரு முக்கிய தொடர்பு உண்டு. சில வகையான புற்றுநோய்களைத் தடுப்பதற்கும், கல்லீரலின் உறுதித்தன்மையைப் பராமரிப்பதற்கும் இந்த இரண்டு நுண்சத்துகளும் ஒன்றுக்கொன்று அதிகமாகியோ அல்லது குறைந்தோ, ஒருவித புரிதலுடன் செயல்படுகின்றன. எனவே, இவையிரண்டுமே முக்கியமான நுண்சத்துகளாகின்றன.

வைட்டமின் ஈ குறைபாட்டு நிலை

உணவில் மூலமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, செரிமானத்திற்கு உட்படும் கொழுப்புச் சத்து, சரியான முறையில் உட்கிரகிக்கப்படாத நிலையில் வைட்டமின் ஈ குறைபாடு ஏற்படுகிறது. ரத்தத்தில் வைட்டமின் ஈ அளவு குறையும்போது, அளவுக்கு அதிகமான இரத்தச் சிவப்பணுக்கள் அழிந்து, ரத்தசோகை ஏற்படுகிறது. குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, கொழுப்புச்சத்தினை உட்கிரகிக்கும் திறமை இயற்கையாகவே குறைவாக இருக்குமென்பதால், வைட்டமின் ஈ அளவும் உடலில் குறைவாகத்தான் இருக்கும். இதனால் இரத்த சோகை ஏற்படுவதுடன், கண்ணில் விழித்திரையின் செயல்பாடும் குறைந்துவிடுகிறது.

மூளையில் இருக்கும் நரம்புகள், நுண்தசைகளில் ஏற்படும் சிதைவு காரணமாக ஏற்படும் நரம்பியல் தொடர்பான ataxia என்னும் நிலையும், உடல் சோர்வு மற்றும் புலன் உறுப்புகளில் குறைபாடு போன்றவையும் ஏற்படுகிறது. மேலும், கல்லீரல், கணையம், பித்தப்பை தொடர்பான நோய்கள் உள்ளவர்களுக்கும், கொழுப்புச் சத்து சரிவர செரிமானமாகாத நிலை இருப்பவர்களுக்கும், இதயநோய்கள், உடல்பருமன் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, அதனால் கொழுப்புச்சத்தினை அறவே ஒதுக்கும் நிலை உள்ள நோய் இருப்பவர்களுக்கும், வைட்டமின் ஈ குறைபாட்டு நிலையில்தான் இருக்கும்.

வைட்டமின் ஈ மிகை நிலை

நடுத்தர வயதில் இருப்பவர்கள் ஒருநாளைக்கு 400 முதல் 800 மில்லிகிராம் வரையிலான வைட்டமின் ஈ யை எடுத்துக்கொள்ளலாம் என்றாலும், நீண்ட நாட்களுக்குத் தொடர்ச்சியாக 1000 மில்லி கிராமுக்கும் அதிகமாக எடுத்துக்கொள்வது ஆபத்து என்று வல்லுநர்களால் எச்சரிக்கப்படுகிறது. இதன் அறிகுறிகளாக குமட்டல், வாந்தி, சோர்வு நிலை, உடல் நலிவடைந்ததுபோன்ற உணர்வு, சில நேரங்களில் வயிற்றுப்போக்கு போன்றவையும் வைட்டமின் ஈ மிகை நிலையால் ஏற்படலாம். சில நேரங்களில் அதிக அளவு ரத்தப்போக்கினை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம்.  எனவே, எந்த வகையான வைட்டமின் ஈ யாக இருந்தாலும், ஒரு நாளைக்கு 1000 மில்லி கிராம் என்பதே அதிகபட்ட அளவாக இருப்பதுதான் நல்லது.

Related Stories: