முகத்தில் உள்ள கருந்திட்டு மறைய!

நன்றி குங்குமம் டாக்டர்

சிலருக்கு முகத்தில், மூக்குப் பகுதிகள், கன்னங்கள் என கருப்பு நிற கருந்திட்டுகள் காணப்படும். இதை கிராமப் புறத்தில் மங்கு என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, இயற்கை வைத்தியங்கள் என்ன என்று பார்ப்போம்:ஜாதிக்காய்ப் பொடி, சந்தனப்பொடி, வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து விழுதாக்கிக் கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் கறுப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் தடவி அரைமணி நேரம் வைத்திருந்து கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்துவர முகத்தில் உள்ள மங்கு (கருந்திட்டு) விரைவில் மறைந்துவிடும்.

குங்கிலியம் 20 கிராம், நல்லெண்ணெய் 100 மி.கி. ஒரு வாணலியில் நல்லெண்ணெயை விட்டு மிதமான சூட்டில் நன்கு காய்ச்சவும். பின்னர், குங்கிலியத்தைப் பொடிசெய்து அதில் கலந்து காய்ச்சவும். குங்கிலியம் நன்கு கரைந்ததும், இறக்கி வடிக்கட்டி வைத்துக் கொள்ளவும்.  பின்னர், 100 மி.லி. தண்ணீர் எடுத்து அதில் விட்டு நன்கு கலக்கவும். சிறிது நேரத்தில் இரண்டும் நன்றாகக் கலந்து ஒரு ஜெல் போன்று வந்துவிடும் அதனை ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு இரவு தூங்குவதற்கு முன்பு கருந்திட்டு உள்ள இடத்தில் தடவி அப்படியே விட்டுவிடுங்கள். காலை எழுந்தவுடன், கழுவி விடவும் விரைவில் கருந்திட்டு மறைந்துவிடும்.

பொடுதலை கீரையை ஒரு கைப்பிடியளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு ஒரு தேக்கரண்டி கலந்து முகத்தில் கருந்திட்டுகள் உள்ள இடத்தில் தடவி பதினைந்து நிமிடம் வைத்திருந்து கழுவிவிட வேண்டும்.உருளைக் கிழங்கு க்ளன்சிங் மற்றும் சிறந்த ப்ளீச்சிங் ஏஜண்டாகவும் செயல்படும். உருளைக்கிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்து துருவிக் கொள்ளுங்கள். அதிலிருந்து சாறெடுத்து வைத்துக்கொண்டு காட்டனில் நனைத்து சருமத்தில், கருந்திட்டு உள்ள பகுதிகளில் ஒத்தி ஆறவிடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவுங்கள். இந்த வழிமுறைகளைத் தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். கருந்திட்டுக்கள் விரைவில் காணாமல் போகும்.

தொகுப்பு : ரிஷி

Related Stories: