மனம் எனும் மாயலோகம்!

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் ஜான்ஸி ராணி

உணர்ச்சி வசப்பட்டு சாப்பிடுதல்

சிற்றூரில் படிப்பை முடித்திருந்த சிவா சென்னையில் பெயர் பெற்ற ஐ.டி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது பெற்றோர்களும் நண்பர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். வேலைகளைத் திறம்பட நிர்வகித்தாலும் ஆங்கிலத்தில் உரையாடுவதும் அந்த கலாச்சாரத்துக்கு ஈடு கொடுத்து சகப் பணியாளர்களுடன் ஒன்றிணைவதும் சிவாவுக்கு சுலபமானதாக இல்லை. அவனறியாமலேயே எப்போதும் எதையாவது சாப்பிடும் பழக்கத்துக்கு அவன் ஆளாகியிருந்தான். சில மாதங்கள் கழித்து ஊருக்குச் சென்றபோது, பெற்றோர்கள் சட்டென அடையாளம் கண்டுகொள்ளாத அளவுக்கு உடல் எடை கூடியிருந்தான்.

பிரச்சனைகளை கையாளும் வழிமுறைகளை அடாப்டிவ் (Adaptive) என்றும் மாலடாப்ட்டிவ் (Maladaptive) என்றும் இரு வகைப்படுத்தலாம். மனஅழுத்தத்தில் இருக்கும்போது அதைச் சமாளிக்க, எது சரியான வழிமுறை என்பதைத் தேர்வு செய்வதே கடினமாக இருக்கும். அப்போது, எதிர்மறையான சமாளிக்கும் வழிமுறைகளையே பெரும்பாலோர் தேர்ந்தெடுப்பர். புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். முதலில் இது சுலபமாகவும் பலன் அளிக்கத்தக்கதாகவும் தோன்றும். ஆனால், நாளடைவில் இதன் விளைவாக மனஅழுத்தம் இன்னும் கூடுதலாகி இருக்கும்.

பொதுவாக பசி எடுத்து சாப்பிடுபவர்கள் உண்டு. அதுவே உணர்ச்சிகளால் உந்தப்பட்டு பசி இல்லாதிருப்பினும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பவர்களும் உண்டு. இது, உணர்வுப்பூர்வமான உண்ணுதல் (Emotional eating) அல்லது அழுத்தத்தில் உண்ணுதல் (Stress eating) எனப்படும். இது மனநோய் இல்லை என்றாலும் ஒருவருக்குள் மறைந்திருக்கக்கூடிய மனப்பதற்ற நோய் (Anxiety),  மன உளைச்சல் (Depression), அனோரெக்ஸியா (Anorexia), புலிமியா (Bulimia) போன்றவற்றின் வெளிப்பாடாக இருக்கக்கூடும். எனவே, தக்க சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

காரணங்கள் என்ன?

ஒருவருக்கு தனது உணர்வுகளைச் சரியாகக் கையாளத் தெரியாமல் ஒரு மாலடாப்டிவ் கோபிங் மெக்கானிசம் (maladaptive coping mechanism) என்பதாக இத்தகைய சாப்பிடும் பழக்கம் ஏற்படும். மனஅழுத்தம் அல்லது கோபம், வருத்தம் போன்ற எதிர்மறை உணர்வுகளால் உந்தப்படும் போது கட்டுப்பாடுகள் இன்றி சாப்பிடுவார்கள்.

சிலருக்கு அதீத வருத்தமோ மன அழுத்தமோ ஏற்படும் போது ‘பசி இல்லை சாப்பாடு பிடிக்கவில்லை’ என்பார்கள். ஆனால், இத்தகைய உணர்வுப்பூர்வமாக உண்பவர்கள் (Emotional eaters) நேர்மாறாக அதிகம் உண்பார்கள்.

அதுவும் குறிப்பாக கொழுப்பு, சர்க்கரை, உப்பு அதிகமிருக்கும் ஆரோக்கியமற்ற உணவுகளை நாடுவர்.மனதின் உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லி, அதற்கான  தீர்வுகளைத் தேடுபவருக்கு இப்பழக்கம் ஏற்படுவதில்லை. மாறாக, பிரச்சனைகளை மனதிலேயே அழுத்திக்கொள்பவர்களுக்கும் தங்களது உணர்வுகளைப் பகுத்தறியாமல் இருப்பவர்களுக்கும் இத்தகைய உணர்வுப்பூர்வமான உண்ணும் பழக்கம் ஏற்படக்கூடும்.

ஏன் ஏற்படுகிறது?

* எல்லாம் தன் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதான எண்ணத்தை அது உருவாக்குகிறது.

* எதிர்மறையான உணர்ச்சிகளை மனதிற்குள் அழுத்திக் கொள்வதற்கான முயற்சியாக இருக்கிறது.

* உண்பதின் மூலமாக தங்களின் உணர்வுகளை சாந்தப்படுத்திக் கொள்வதாக நினைக்கிறார்கள்.

* இது பழக்கமான பின் அதிலிருந்து வெளிவர முடியாமல் இருப்பது.

 

இதனால் என்ன வாகும்?

கட்டுப்பாடுகள் இன்றி அதிகமாக சாப்பிட ஆரம்பிக்கும் போது அதன் பலனாக மனதில் குற்றவுணர்வு தோன்றும். உங்களுக்கு உங்கள் மீதிருக்கும் மரியாதையும் நம்பிக்கையும் பாதிக்கும். மேலும் உடல் எடை கூடி உடல்பருமனுக்கு இட்டுச்செல்லும். உடல் பருமன் பல உடல் சார்ந்த நோய்களுக்கு மட்டுமின்றி மனநல சீர்கேடுகளையும் விளைவிக்கும் என சென்ற இதழில் பார்த்தோம்.

 

இதனை எப்படி சரி செய்வது?

* முதலில் நீங்கள் இத்தகைய பழக்கத்துக்கு ஆளாகி இருக்கின்றீர்களா என சுய அலசல் செய்யுங்கள்.

* ஆம் என்றால் எத்தகைய காரணிகளால் தூண்டப்படுகிறீர்கள் என கண்டு கொள்ளுங்கள்.

* அந்தக் குறிப்பிட்ட காரணிகளை கையாளும் சரியான வழிமுறைகளை தேர்ந்தெடுக்க முயலுங்கள்.

* உண்மையான பசிக்கும் உணர்வுகளால் எழும் உந்துதலுக்குமான வித்தியாசங்களை கவனமுடன் ஆராயுங்கள்.

* என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை ஒரு பதிவேட்டில் எழுதி வாருங்கள்.

* உங்கள் மனதில் எழும் உணர்வுகளை பகுத்தறியுங்கள்.

* உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் அவற்றை பகிருங்கள்.

* தக்க சிகிச்சை மேற் கொண்டால் இதிலிருந்து மீள முடியும் என நம்பிக்கையுடன் அணுகுங்கள்.

Related Stories: