விக்கல்

நன்றி தொகுப்பு தோழி

சாதாரண விக்கலுக்குக்கூட ஆயுர்வேதத்தில் நல்ல தீர்வுண்டு….

மனிதனுக்கு வழக்கமாக வரக்கூடிய இயற்கை தூண்டுதல்களான இருமல், தும்மல், கொட்டாவி, ஏப்பம், காற்று பிரிதல், உறக்கம் போன்றது தான் இந்த விக்கல். “வெக்கி செத்தவனை விட விக்கி செத்தவன் தான் அதிகம்” என்று நம் பெரியவர்கள் கூறி வைத்தது போல் ‘விக்கல்’ ஒரு சாதாரண இயற்கை தூண்டுதலின் அறிகுறியாக இருந்தாலும், சில நேரங்களில் அதுவே நமது உயிருக்கு பேராபத்து விளைவிக்கக்கூடிய பல நோய்களின் ஒரு அறிகுறியாகவோ அல்லது அதுவே ஒரு மோசமான நோயாகவோ வரலாம். ஆகவேதான், விக்கலை பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

‘விக்கல்’ என்பது உதரவிதானத்தில் மீண்டும் மீண்டும் ஏற்படும் பிடிப்புகளாகும். நம் உடம்பில் நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் இடையில் உள்ள பகுதிதான் உதரவிதானம் (Diaphragm). இது ஒரு தசை. இந்தத் தசை சுவாச செயல்முறையின் ஒரு முக்கிய பகுதியாகும். மூச்சை உள்ளிழுக்கும்போது கீழ்நோக்கியும், சுவாசிக்கும்போது மேல்நோக்கியும் இது நகரும். இதன் பணி, நுரையீரலை சுருங்கி விரிய வைத்து, மூச்சை இழுத்துவிட உதவுவதே. இதன் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றமே விக்கலுக்கு அடிப்படை.

உதரவிதானத்தின் தன்னிச்சையான சுருக்கங்களால் விக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த தன்னிச்சையான சுருக்கம் உங்கள் குரல் நாண்களை மிக சுருக்கமாக மூடுவதற்கு காரணமாகிறது. இந்தச் செயல்கள் விக்கலின் ‘ஹிக்’ ஒலியை உண்டாக்குகின்றன. விக்கல் மிக விரைவாக நிகழ்கிறது மற்றும் சிகிச்சையின்றி சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பும் வாய்ப்புள்ளது.

விக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்

விக்கல்கள் பல காரணங்களுக்காக நிகழலாம் - அவற்றில் சில உடல் ரீதியானவை, சில உணர்ச்சிகள் ரீதியானவை. மூளையை உதரவிதானத்துடன் இணைக்கும் நரம்பில் எரிச்சல் ஏற்படு போது விக்கல் வருகிறது.

குறுகிய கால விக்கலுக்கான பொதுவான காரணங்கள்

*அதிகமாக அல்லது மிக விரைவாக சாப்பிடுவது

*நீண்ட நேரம் உணவு இல்லாமல் இருப்பது

*காரமான உணவு

*மது

*மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ந்த உணவுகள் மற்றும் பானங்கள்

*சோடா போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்கள்

*காற்று வெப்பநிலையில் திடீர் மாற்றம்

*ஏரோபேஜியா, இது அதிகப்படியான காற்றை விழுங்குவது

*உற்சாகம், பதட்டம் அல்லது உணர்ச்சிவசப்படுவது  

*மன அழுத்தம்

*அறுவை சிகிச்சைக்கு முன் மயக்க மருந்து கொடுக்கும் போது.

*தூசி, நச்சுப் புகைகள்.

நீண்ட கால விக்கலுக்கான பொதுவான காரணங்கள்

விக்கல் பொதுவாக தற்காலிகமானது, ஆனால் அரிதான சந்தர்ப்பங்களில், அவை நீண்டநேரம் இருக்கலாம். நீண்ட காலத்திற்கு நீடிக்கும் விக்கல்கள் பின்வரும் காரணங்களால் ஏற்படலாம்:

*மது மற்றும் புகையிலையை தொடர்ந்து பயன்படுத்துவது

*அறுவைசிகிச்சைக்குப் பிறகு

*ஸ்டெராய்டுகள் மற்றும் ட்ரான்குலைசர்கள் உட்பட சில வகை மருந்துகள்

*புற்றுநோய் மற்றும் கீமோதெரபியின் பக்க விளைவுகள்.

*எலக்ட்ரோலைட்கள் அளவின் சமநிலையின்மை

*சர்க்கரை நோய்

*சிறுநீரக செயலிழப்பு

*தமனி சிதைவு

*பார்கின்சன் நோய்

*மூளையழற்சி அல்லது மூளைக்காய்ச்சல் போன்ற நரம்பு மண்டலக் கோளாறுகள்.

கடுமையான மற்றும் நீடித்த விக்கல்கள் சோர்வு, ஊட்டச்சத்து குறைபாடு, எடை இழப்பு, நீரிழப்பு மற்றும் தீவிர சூழ்நிலைகளில் மரணம் கூட ஏற்படுத்தலாம். தற்காலிக தலைச்சுற்றல், பார்வைக் கோளாறுகள் மற்றும் பதட்டம் ஆகியவை கூட ஏற்பட வாய்ப்புண்டு.2 நாட்களுக்கும் மேலாக விக்கல் இருந்தால், அவை உணவு, சுவாசம், தூக்கம் ஆகியவற்றில் தலையிடும் அளவுக்கு கடுமையாக இருந்தால் அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தினால், மற்றும் வயிற்றுவலி, காய்ச்சல், மூச்சுத் திணறல், வாந்தி மற்றும் இருமல் ஏற்பட்டால் காலம் கடத்தாமல் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.

ஆயுர்வேதத்தில் விக்கல் எனும் நோய்

விக்கல் என்பது ஆயுர்வேதத்தில் “ஹிக்கா” என்று அழைக்கப்படுகிறது.  ஹிக்கா எனும் நோய் கபம் மற்றும் வாதத்தின் ஆதிக்கம் மிகுந்தது இது பித்தத்தின் இடமாகிய வயிற்றின் மேல் பகுதியில் உண்டாகிறது.  ‘ஹிக்கா’ ஐந்து வகைப்படும். அவை, மஹா ஹிக்கா, கம்பீர ஹிக்கா, வியபேத ஹிக்கா, க்ஷுத்ர ஹிக்கா, அன்னஜ ஹிக்கா மற்றும் யமக ஹிக்கா. இதில் மகா மற்றும் கம்பீர வகைகள் மிகவும் ஆபத்தானவைகளாக பார்க்கப்படுகின்றது.

சிகிச்சை

விக்கல் உடனே (சில நிமிடங்களில்) நிற்க சில எளிய வழிகள் உள்ளன.

*விக்கல் வரும்போது தண்ணீர் குடித்தவுடன் பெரும்பாலானோருக்கு விக்கல் நின்று விடும். அப்படியும் விக்கல் வந்தால் அதை நிறுத்த பல வழிகள் உள்ளன.

*இருபது எண்ணும் வரை மூச்சை வெளிவிடாமல் பின்பு வெளிவிடும் போது விக்கல் நிற்கும்.

*கொஞ்சம் சர்க்கரையை வாயில் போட்டு தானாக கரையும் வரை வைத்திருந்தாலும் விக்கல் நிற்பதற்கு வழிவகுக்கும். இருப்பினும், இது சர்க்கரை

நோயாளிகளுக்கு ஏற்ற வழியல்ல.

*ஏதாவது ஒரு வழியில் தும்மலை வரவைத்தால் கூட விக்கல் போக வாய்ப்பு இருக்கிறது.

*நேராக நின்று ஒரு நிமிடத்திற்கு இரண்டு கைகளையும் மேல்நோக்கி நீட்டி வைத்தால் கூட விக்கல் நின்று விடும்.

*மற்றபடி விக்கல் வரும் போது பயமுறுத்துவது, அதிர்ச்சி அடைய செய்வது தவறு. ஏனெனில் ஒருவேளை இதய நோயாளியாக இருந்தால் வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

விக்கல்கள் பொதுவாக தானாகவே சரியாகக் கூடியவை.  விக்கல்கள் கடுமையான மற்றும் தொடர்ச்சியான நிகழ்வுகளில் மட்டுமே மருத்துவ ரீதியாக சிகிச்சையளிக்கப்படுகின்றன.

அனுலோமனம் (வாதத்தை தன் சுய பாதையில் செலுத்தும் சிகிச்சை) எனும் சிகிச்சை முறை தான் ஹிக்கா எனும் நோய்க்கு அடிப்படை சிகிச்சை சித்தாந்தமாக ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.

வீட்டு வைத்திய முறைகள்

ஒரு டீஸ்பூன் நெய் எடுத்து, அரை டீஸ்பூன் மஞ்சள் மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்க்கவும். அதை ஒரு பாத்திரத்தில் எரித்து, 2-3 நிமிடங்கள் அந்த புகையை உள்ளிழுக்கவும். இதை ஒரு நாளைக்கு 3-4 முறை உணவிற்கு முன் செய்யவும்.வயிற்று உப்புசத்துடன் தொடர்புடைய விக்கல் ஏற்பட்டால், 3 சிட்டிகை பெருங்காயத்தை எடுத்து, அதை ஒரு டீஸ்பூன் நெய்யில் சேர்த்து, லேசான தீயில் 10-20 வினாடிகள் வறுத்து, இதை ஒரு கப் மோரில் சேர்க்கவும். பின் அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த மோரை பருக விக்கல் நிற்கும். திப்பிலி, இஞ்சி, உப்பு மற்றும் நெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட குதிரைவாலி / பச்சைப்பயறு சூப்பை கொடுக்க விக்கல் நிற்கும்.

தயிர், இஞ்சி, திப்பிலி, மிளகு மற்றும் நெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட கத்திரிக்காய் சூப் பயனுள்ளதாக இருக்கும்.விக்கல் உள்ள நோயாளிகளின் உணவு மற்றும் பானங்களில் திப்பிலி, கருமிளகு, உப்பு, பெருங்காயம், இஞ்சி மற்றும் நெய் சேர்த்து தயாரிக்க வேண்டும்.ஆட்டுப்பாலை இஞ்சி மற்றும் சர்க்கரை சேர்த்து பயன்படுத்தினால் விக்கல் குணமாகும்.

ஆயுர்வேத சிகிச்சை முறைகள்

நோயின் ஆரம்ப காலகட்டத்தில் நோயாளிக்கு கல் உப்பு மற்றும் எண்ணையை மார்பு பகுதியில் தேய்த்து அந்த இடத்தில ஒத்தடம் தருவது சிறப்பான பலனை அளிக்கும்.

உள் மருந்துகளாக

* முத்க யூஷம்,

* தசமூல யவாகு,

* ஹிங்குவாதி யவாகு உணவு முறையாக கொடுக்கப்படுகிறது.  

* பத்யாதி ஆஸவம்,

* சௌவர்ச்சலாதி சூரணம்

* பாரங்கி நாகராதி சூரணம்

* மனஷிலாதி கிருதம்,

* ஷட்யாதி சூர்ணம்,

* முக்தாத்ய சூர்ணம்,

* தசமூலாத்ய கிருதம்,

* ஹபுஷாதி கிருதம்

* வாசா கிருதம்,

* தன்வந்தரம் குளிகா,

* தாத்ரியரிஷ்டம்,

* மயூர் பிச்ச பஸ்மம்,

* ஷ்ரிங்க பஸ்மம்,

* புனர்ணவரிஷ்டம்,

* சுதசேகர ராசா,

* ஏலாதி வடி,

* பிப்பலி ரசாயனம்

* லக்ஷ்மி விலாஸ் ரஸ்

* கமதூத ரஸ்.

இவற்றை தவிர ‘நஸ்யம்’ என்னும் நாசி துவாரங்களின் வழியாக மருந்து ஊற்றுதல் விக்கலை போக்க சிறந்த சிகிச்சையாக அமைகிறது.‘நஸ்யம்’ எனும் சிகிச்சை முறையால் விக்கல் உடனடியாக நின்று விடும். விக்கல் மிகவும் தீவிரமாக இருந்தால் பூண்டு அல்லது வெங்காயத்தின் வேர் பகுதியை அரைத்து அதன் சாறு மூலம் நஸ்யம் கொடுத்தால் விரைவில் குணமடையும்.

பத்தியம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள்

* மேலே கூறிய காரணங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்

* பயணத்தின் போது முகமூடி அணியவும்

* பிராணாயாமம் மற்றும் தியானம் மூலம் உணர்ச்சி மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கவும்.

* தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும்.

சமையல் சிலிண்டர் கவனம்

இந்த காலத்தில் நகரம் மட்டுமில்லாமல் கிராமங்களிலும் சிலிண்டர் அடுப்பினை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். என்னதான் நாம் நாகரீகத்திற்கு மாறி வந்தாலும் சிலிண்டர் அடுப்பு குறித்த பாதுகாப்பு முறைகள் பற்றி பலருக்கு தெரிவதில்லை.

இதனால் சிலிண்டரினால் ஏற்படும் பாதிப்புகளோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. காரணம், நம்முடைய கவனக்குறைவு என்றுதான் சொல்லணும். வீட்டில் சிலிண்டர் அடுப்புகளை பயன்படுத்தும் போது, அதை எப்படி பயன்படுத்த வேண்டும், விபத்துக்கள் ஏற்படாமல் எப்படி பாதுகாக்கலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

*சிலிண்டரை முதலில் வாங்கியதும், ரப்பர் டியூப் சிலிண்டர் வால்வின் உட்புறத்தில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

*சிலிண்டரை காற்றோட்டமான பகுதியில், உயரம் சமமான பகுதியில் தரையில் செங்குத்தாக வைக்க வேண்டும்.

*வெப்பம் மிகுந்த பொருட்கள் மற்றும் விரைவில் தீப்பற்றும் பொருட்களான எண்ணெய்களை சிலிண்டரின் அருகில் வைக்கக் கூடாது.

*சிலிண்டரில் கசிவுகள் ஏற்படுவது போல தென்பட்டால், உடனே சோப்பு நீரினைக் கொண்டு பரிசோதிக்க வேண்டும்.

*சமையல் முடிந்தவுடன், எப்போதும் சிலிண்டரின் ரெகுலேட்டர் மற்றும் நைலான் கயிற்றுடன் கூடிய பாதுகாப்பான மூடியை கவனமாக மூடி வைக்க வேண்டும்.

*ஃபிரிட்ஜ் போன்ற மின்சாதனப் பொருட்களை சமையல் அறைக்குள் வைக்கக்கூடாது. ஏனெனில் மின்சாதனப் பொருட்களால் ஏற்படும் மின் அழுத்தத்தின் ஏற்றத்தாழ்வுகள் கியாஸில் கசிவை ஏற்படுத்தும்.

*சிலிண்டர் டியூப்பில் விரிசல்கள் ஏற்படுகிறதா என்பதை பரிசோதித்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்றி விட வேண்டும்.

*திடீரென சிலிண்டர் கசிவு ஏற்பட்டால், சிலிண்டரின் ரெகுலேட்டர் மற்றும் பர்னர் நாப்களை மூடிவிட்டு, அந்த அறையில் மின் சுவிட்சுகள் மற்றும் சாதனங்களை இயக்காமல் நமது வீட்டின் வெளிப்புறம் உள்ள மின் இணைப்பு சப்ளைகளை துண்டித்து விட வேண்டும்.

- கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

தொகுப்பு : உஷா நாராயணன்

Related Stories: