SURROGACY யாருக்கானது? அதன் விதிமுறைகள்!

நன்றி தொகுப்பு தோழி

‘‘ஒரு பெண்ணிற்கு குழந்தைபேறு அவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமாக கருதப்படும் விஷயம். ஒரு பெண்ணால் இயற்கை முறையில் குழந்தை பெற முடியவில்லை என்றால் அதற்கு மருத்துவ தொழில்நுட்பங்கள் உள்ளன. ஆனால் அதுவுமே அவர்களுக்கு கை கொடுக்காத போது அவர்கள் வாடகைத்தாய் என்ற முறையை தேர்வு செய்யலாம் என்று இந்திய சட்டத்தில் இடம் உள்ளது’’ என்கிறார் பிரபல மருத்துவமனையின் கருவுறுதல் பராமரிப்பு மற்றும் IVF துறையின் தலைவரான டாக்டர் முல்லை வேலுத்தம்பி. இவர் வாடகைத்தாய் சட்டம் குறித்தும் அதற்கான விதிமுறைகள், எந்த தம்பதியினர் அந்த சட்டத்திற்குள் வருவார்கள் என்பதைப் பற்றி விவரிக்கிறார்.

வாடகைத்தாய் திட்டத்தை யார் பெற முடியும்?

ஒரு பெண்ணால் குழந்தைப்பேறு பெற முடியாத பட்சத்தில்தான் அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற முடியும். இதற்கான சட்டம் 2022ம் வருடம் ஜனவரி மாதம் நிறுவப்பட்டுள்ளது. அதில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் பிரச்னை காரணமாக அவளால் குழந்தையை பெற முடியாது. ஒரு குழந்தையை தாங்கக்கூடிய திறன் கர்ப்பப்பைக்கு இல்லாமல் இருக்கும். சில பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள எண்டோமெட்ரிய சுவர் மெல்லியதாக இருக்கும் பட்சத்தில் கரு பதிஞ்சு வளர முடியாது. IVF முறையில் கருத்தரித்தாலும், அவர்களுக்கு அது நிலைத்திருக்காது.

இருதய பிரச்னை காரணமாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை. தொடர் கருக்கலைப்பு. கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக கர்ப்பப்பை நீக்கப்பட்ட நிலை. இது போன்ற காரணங்களால் ஒரு பெண்ணால் எந்த முறையிலும் குழந்தை பெற முடியாது என்றால் மட்டுமே அவர்கள் வாடகைத்தாயினை நாட முடியும்.

விதிமுறைகள்

*எசன்ஷியல் சான்றிதழ், கருத்தரிப்பதில் இயற்கை முறையாகவும், மருத்துவ சிகிச்சை மூலமாகவும் பெண்ணால் கருத்தரிக்க முடியாது என்று மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் சான்றிதழ் அவர்களை முழுமையாக மகப்பேறு மருத்துவர் சோதித்த பிறகு தான் கொடுக்கப்படும்.

*எலிஜிபிலிட்டி சான்றிதழ், அதாவது ெபண்ணின் வயது 23 முதல் 50 வரை இருக்க வேண்டும். ஆணின் வயது 26 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

*திருமணமாகி கணவருடன் இருக்க ேவண்டும். சிங்கில் பேரன்ட், விவாகரத்து பெற்றவர்களாக இருக்கக் கூடாது.

*வாடகைத்தாயினை நாடும் தம்பதியினருக்கு குழந்தை இருக்கக்கூடாது.

*இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.

*மாஜிஸ்திரேட் அவர்களிடம் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இருப்பதாகவும், அந்த குழந்தைகளுக்கு தாங்கள் தான் பெற்றோர் என்று வாக்குமூலம் கொடுத்ததற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.

*வாடகைத்தாயாக இருப்பவர் தம்பதியினரின் உறவு முறையாக இருக்கலாம். அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். வாடகைத்தாயாக வருபவர்கள் இதற்கு முழு சம்மதம் தெரிவித்திருக்க வேண்டும்.

*வாடகைத்தாயாக வருபவர்களுக்கு எந்தவித பணமும் கொடுக்கக் கூடாது.

*வாடகைத்தாயாக வருபவர்களுக்கு 36 மாதம் மருத்துவ காப்பீடு எடுத்திருக்க வேண்டும். காரணம் அவர்கள் வாடகைத்தாயாக இருக்கும் காலத்திலும் குழந்தை பிறந்த பிறகு அவர்களுக்கு மருத்துவ ரீதியாக பிரச்னை ஏற்படும் போது இந்த மருத்துவ காப்பீடு அவர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் கர்ப்ப காலத்தில் இருக்கும் போது அவர்களுக்கான மருத்துவ செலவு அனைத்தும் தம்பதியினர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

*வாடகைத்தாயா வரும் பெண்களின் வயது 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

*திருமணமானவராக இருக்க வேண்டும். ஒரு குழந்தையை பெற்றிருக்க வேண்டும். அவர் கணவரின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.

*வாடகைத்தாயாக வருபவர்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

*வாடகைத்தாயின் கருமுட்டையினை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது. அவர்களின் கர்ப்பப்பையினை குழந்தை வளர மட்டுமே பயன்படுத்தப்படுவதால், அவர்களுக்கும் குழந்தைக்கும் மரபியல் தொடர்பு இருக்காது.

*பெண்ணின் கருமுட்டையுடன் ஆணின் விந்தணுவை செயற்கை முறையில் கருத்தரித்து அதை IVF சிகிச்சை மூலமாக தான் வாடகைத்தாயின் கருப்பையில் வைப்பார்கள். ஒரு வேளை பெண்ணிற்கு கருமுட்டை இல்லாத பட்சத்தில் அவர்கள் அதனை டோனர்களிடம் மருத்துவ ரீதியாக பெறலாமே தவிர எக்காரணம் கொண்டும் வாடகைத்தாயின் கருமுட்டையினை பயன்படுத்தக் கூடாது.

*ஜனவரி மாதம் இயற்றப்பட்ட சரகசி சட்டத்தில் தம்பதியினருக்கு திருமணமாகி ஐந்து வருடம் நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஜூன் மாதம் இந்த சட்டம் ரீதியாக கொடுக்கப்பட்ட அறிவிப்பில் இது குறித்து குறிப்பிடப்படவில்லை. காரணம் ஒரு தம்பதியனரால் மருத்துவ ரீதியாக குழந்தையே பெற முடியாது என்று டாக்டர்களாக ஊர்ஜிதப்படுத்தப்பட்ட பிறகு அவர்கள் ஐந்து வருட காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

*ஒரு பெண் வாடகைத்தாயினை நாடப்போவது குறித்து அதற்கான அனைத்து சான்றிதழ்களையும் சரகசி போர்ட்டில் பதிவு செய்த பிறகு தான் அதற்கான சிகிச்சை முறையினை மருத்துவர்கள் ஆரம்பிக்க முடியும்.  

*இந்த விதிமுறைகளை பின்பற்ற தவறுபவர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனை வழங்கப்படும்’’ என்று விவரித்தார் டாக்டர் முல்லைவேலுத்தம்பி.

தொகுப்பு : ரிதி

Related Stories: