தடுப்பூசி vs நம்பிக்கை உண்மைகள்

நன்றி குங்குமம் டாக்டர்

தடுப்பு மருந்துகளால் மனித இனம் பெற்ற நன்மை சொல்லில் அடங்காதவை. தடுப்பூசிகள் போடாதவர்கள் தற்போது மிகமிகக் குறைவு என்றாலும், இத்தனை ஆண்டுகளாக, விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தடுப்பூசி குறித்த தவறான கருத்துகள் சமூகத்தில் உலவவே செய்கின்றன. ‘வந்த பின் அவதிப்படுவதைவிட வருமுன் காப்பதே மேல்’ என்ற அடிப்படையிலேயே இந்தத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. உலகில் எத்தனையோ கடும் தொற்றுக்கள் மனித குலத்தை காவு வாங்கியுள்ளன. இப்போதுகூட கொரோனா அலை இன்னமும் முடியவில்லை. இந்த சூழ்நிலையில் தடுப்பூசி ஒன்றே நம் ஆபத்பாந்தவன். ஆனால், இதை அறியாமல் இங்கு ஒரு கூட்டம் தடுப்பூசிக்கு எதிராகப் பேசி வருகிறது. தடுப்பூசி பற்றிய பொதுவான சில நம்பிக்கைகளையும் உண்மையையும் பற்றிப் பார்ப்போம்.

1.நம்பிக்கை: தடுப்பூசிகள் மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
உண்மை: பொதுவாகவே, தடுப்பூசி, மருந்துகள் பலதரப்பட்ட பரிசோதனைகளுக்குப் பின்னர் பயன்பாட்டுக்கு உரியதா என்று உறுதி செய்யப்பட்ட பின்புதான் புழக்கத்துக்கு வருகின்றன. பரிசோதனைகளுக்குப் பின் ஏற்படும் பக்கவிளைவுகள் மிகமிக அரிதானவையே. எனவே, தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படும் என அஞ்ச வேண்டியது இல்லை.

2.நம்பிக்கை: சில நோய்களுக்குத் தடுப்பூசி போடுவதில் எந்தப் பலனும் இல்லை.
உண்மை: அம்மை, போலியோ போன்ற நோய்கள் வருவது குறைவு என்றாலும் அதற்கான தடுப்பூசிகளையும், தடுப்பு மருந்துகளையும் எடுத்துக்கொண்டால்தான் அவற்றை முற்றிலுமாக ஒழிக்க முடியும். எனவே, சில நோய்களுக்குத் தடுப்பூசி வேண்டாம் என்று சொல்வது முழுதான உண்மை இல்லை.

3.நம்பிக்கை: தடுப்பூசிகள் நோய்களை 100 சதவிகிதம் தடுப்பது இல்லை.

உண்மை: இது ஒருவரின் உடல் நிலையைப் பொறுத்து மாறுபடுகிறது. பொதுவாக, தடுப்பூசிகள் சிறப்பாகவே செயல்படுகின்றன. மிகச்சிலருக்கு மட்டுமே தடுப்பூசி போட்ட பிறகும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், இது மிகமிகக் குறைவானவர்களுக்கே நேர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

4.நம்பிக்கை: தடுப்பூசிகள் கற்றல் குறைபாடுகளை உண்டாக்குகின்றன. ஆட்டிசம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
உண்மை: இது முற்றிலும் தவறான கருத்து. பிரிட்டிஷ் மருத்துவக் குழு ஒன்றின் பரிசோதனையின் அடிப்படையில், தடுப்பூசிகள் மூலம் உடலின் எதிர்ப்புத்தன்மையை அதிகரித்துக்கொள்ள முடியுமே தவிர தடுப்பூசிகளால் கற்றல் குறைபாடுகளோ ஆட்டிசம் போன்ற பாதிப்புகளோ ஏற்பட வாய்ப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டு உள்ளது.

5.நம்பிக்கை: சுற்றுச்சூழல் சுகாதாரமாக இருந்தாலே போதும். தடுப்பூசிகள் ஏதும் தேவையே இல்லை.
உண்மை: பொதுவாக, பல நோய்கள் சுற்றுப்புறச்சூழலின் சுகாதாரமின்மையால்தான் ஏற்படுகின்றன என்பது உண்மைதான். நமது சூழலை சுத்தமாக வைத்திருக்காமல் இருப்பதே நோய்வருவதற்கான எளிய காரணமாகும். ஆனால், அதற்காக தடுப்பூசிகளைத் தவிர்க்க வேண்டும் என்பது மிகவும் தவறான கருத்து. ஆரோக்கியமான சுற்றுப்புறச் சூழல் இருந்தாலும் தடுப்பூசிகள் போடுவதைத் தவிர்க்கக் கூடாது.

6.நம்பிக்கை: காய்ச்சலுக்காகத் தடுப்பூசிகள் எடுத்துக்கொள்வது தேவையற்றது.
உண்மை: காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்கள் பலவகையானவை. எளிய சளிக் காய்ச்சல் போன்றவற்றுக்கு மாத்திரை, மருந்துகள் எடுத்துக்கொள்வதே போதுமானது. ஆனால், மோசமான வைரஸ் காய்ச்சல்கள் நம் உடல் நலத்தின் ஆணிவேரையே அசைத்துப் பார்ப்பவை என்பதால், இவற்றுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் அவசியம்.

7.நம்பிக்கை: தடுப்பூசிகள் பாதரசத்தைக் கொண்டுள்ளன. எனவே, அவை ஆபத்தானவை.
உண்மை: சில தடுப்பூசிகளில் பாதரசம் உள்ளது என்பது உண்மைதான். ஆனால் இவை எவ்வித பாதிப்பும் அற்றவை. எனவே, பாதரசம் கலந்துள்ளது என அச்சப்படத் தேவை இல்லை.

8.நம்பிக்கை: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே, ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளைப் போடக் கூடாது.
உண்மை: பொதுவாக, குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் பலதரப்பட்ட தடுப்பு மருந்துகள் கலவையாகவோ, ஒன்றன்பின் ஒன்றாகவோ கொடுக்கக் கூடாது. ஏனெனில், தடுப்பு மருந்துகள் உடலுடன் சேர்ந்து செயல்பட நேரம் எடுக்கும். மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சீராக செயல்படுத்தி நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கச்செய்வதற்கு தொடர்ச்சியான தடுப்பு மருந்துகள் தவிர்க்கப்பட வேண்டும். ஆனால், சில நோய்களுக்கு முத்தடுப்பூசிகள் போன்றவை உள்ளன. இவற்றை ஒரே ஊசியாகப் போடுவதால் பிரச்னை ஏதும் இல்லை.

தொகுப்பு : இளங்கோ 

Related Stories: