×

நாகர்கோவில் நகராட்சியில் 2ம் கட்ட முகாம் மனைகளை வரன்முறைப்படுத்த 100க்கும் மேற்பட்டோர் மனு

நாகர்கோவில், ஜூன் 21:   நாகர்கோவில் நகராட்சி உள்பட தமிழகம்  முழுவதும் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வந்தன. இதில்  பெரும்பாலானவை அரசின் அனுமதி பெறாமலேயே வீட்டு மனைகளாக விற்கப்பட்டன.  இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில்,  அனுமதி பெறாத வீட்டு மனைகள் விற்பனை பதிவு செய்ய தடை விதித்து  உத்தரவிட்டது. இந்நிலையில், இதில் ரியல்எஸ்டேட் அதிபர்கள் தளர்வு கோரி மனு  தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து புதியதாக விளைநிலங்களை வீட்டுமனைக்கு  விற்பனை செய்யஅனுமதிக்க முடியாது. எனினும், ஏற்கனவே 20.10.2016க்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட  நிலங்களை அரசு, சட்டங்களுக்கு உட்பட்டு வரன்முறைசெய்து பதிவு செய்து கொள்ள  அனுமதி அளித்தது.

 இதன்படி, உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி பெறாத மனைகளை  வரன்முறை படுத்த மனுக்கள் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்கான  கூடுதல் கட்டணமும் அறிவிக்கப்பட்டது. இதனால் அனுமதி இல்லாத இடங்களில்  வீட்டு மனைகள் வாங்கியவர்கள் உடனடியாக மனு செய்தனர். இந்த மனுக்கள் மீது  இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. தற்போதுதான் இந்த மனுக்கள் மீது  விசாரணை தொடங்கியுள்ளது. நேற்று நாகர்கோவில் நகராட்சியில் நகரமைப்பு  அலுவலர் விமலா தலைமையில், அனுமதி பெறாத மனைகளை வரன்முறைப் படுத்தும்  சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மனு அளித்தனர். அவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்து வரன்முறைப்படுத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நகர் ஊரமைப்பு துறை துணை இயக்குநர் நாகராஜன் சான்றிதழ் வழங்கினார். ஆணையர் சரவணகுமார், நகர அமைப்பு ஆய்வாளர்கள் கெபின்ஜாய், சந்ேதாஷ்குமார், மகேஷ்வரி, துர்க்காதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர். கடந்த 13ம் தேதி நடந்த முதற்கட்ட சிறப்பு முகாமில் 12 பேருக்கு அனுமதியற்றமனைகள் வரன்முறைபடுத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 3ம் கட்ட சிறப்பு முகாம் வரும் 27ம் தேதி நடக்கிறது. அந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்தி பயன்பெற வேண்டும் என நகராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி