×

கன்னியாகுமரி காவல்நிலைய வளாகத்தில் குவிந்து கிடக்கும் பழைய வாகனங்கள்

கன்னியாகுமரி, ஜூன் 21: கன்னியாகுமரி காவல்நிலையத்தில் பழைய வாகனங்கள் குவிந்து கிடக்கிறது. பாம்புகள் நடமாட்டத்தால் போலீஸ் குடியிருப்பில் போலீசார் தங்குவதற்கு தயக்கம் காட்டி வருகிறார்கள்.சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் சுற்றுலாபயணிகள் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கன்னியாகுமரியில் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து போலீஸ் அலுவலகம் மற்றும் போலீசார் தங்கு வதற்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த வளாகத்தில் விபத்தில் சிக்கும் வாகனங்கள், திருட்டு வழக்கில் பிடிபடும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்யும் வாகனங்கள் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல வருடங்களாக ஏராளமான வாகனங்கள் குவிந்து கிடக்கின்றன. இதை மாற்ற மாவட்ட எஸ்.பி. அலுவலகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் காரணமாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதி குப்பை கூழங்கள் மற்றும் செடி கொடிகள் வளர்ந்து அடர்ந்த காடுபோல் காட்சியளிக்கிறது. இந்த புதர்களில் பாம்புகள் அதிகளவில் உள்ளன. இந்த பாம்புகள் இரவு நேரங்களில் போலீசார் தங்கும் குடியிருப்பு பகுதியில் புகுவதால் அந்த குடியிருப்பு பகுதியில் போலீசார் இரவு நேரங்களில் தங்க தயங்குகின்றனர்.எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், போலீசாரின் நலன் கருதி இப்பகுதியில் உள்ள பழைய வாகனங்களை அப்புறப்படுத்த எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி