×

மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பால பணிகள் இழுத்தடிப்பு வியாபாரிகள் மறியல் போராட்டம் வர்த்தகர்களுடன் கலந்துரையாடலுக்கு பின் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ தகவல்

மார்த்தாண்டம், ஜூன் 21:மார்த்தாண்டத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க ₹142 கோடியில்  இரும்பு மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2016 டிசம்பர் இறுதியில் தொடங்கியது. குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலம் முதல் பம்மம் வரை சுமார் 2.5 கி.மீ. தூரத்திலான இந்த பாலப்பணிக்கான ஒப்பந்த காலம் 2 வருடம் ஆகும். ஆனால் பாலப்பணி தொடங்கிய போது ஒன்றரை வருடத்திற்குள் பணியை முடித்து திறப்பு விழா நடத்தப்படும் என அமைச்சர் மற்றும் ஒப்பந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் ஆரம்பத்தில் வேகமாக நடந்த பணிகள் போகப்போக இழுத்தடிக்கப்பட்டது. இதற்கு சப் கான்டிராக்ட் எடுத்துள்ள நிறுவனங்களுக்கு உரிய காலத்தில் பணம் பட்டுவாடா செய்யாததே காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. மார்த்தாண்டம் குமரி மாவட்டத்தில் 2வது பெரிய வர்த்தக நகரம் ஆகும். மலையோர கிராம மக்கள் உள்பட கடலோர மக்களும் இங்கு வந்து செல்லும் அளவிற்கு அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்களும் இங்கு உள்ளது. ஆனால் பாலப்பணியால் வாகன ேபாக்குவரத்து துண்டிப்பு, கடைகள் முன் மாதக்கணக்கில் தேங்கிய சகதி போன்ற காரணங்களால் வியாபாரம் பாதிப்பால் இதுவரை 100க்கும் மேற்பட்ட கடைகள் பூட்டப்பட்டுள்ளன. இன்னும் சிலர் பொதுமக்கள் வருகையின்மையால் வியாபாரமே இல்லாமல் கடைகளை திறந்து வைத்து  காத்திருக்கின்றனர். வங்கிகளில் லோன் எடுத்து வியாபாரம் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மிகவும் தாமதமாகவே தரைவழி மின்பாதை பணிகள் தொடங்கப்பட்டது. பிஎஸ்என்எல்  இணைப்பு துண்டிப்பு போன்றவற்றால் வங்கிகள் மற்றும் இன்டர்நெட் சென்டர்களில் பணி பாதிப்பு ஏற்படுகிறது. மார்த்தாண்டத்தில் மாற்றுச்சாலை வசதிகள் இல்லாததால் வாகனங்கள் பல கி.மீ. சுற்றி செல்கிறது. இதனால் நோயாளிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில் பாலப்பணியால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மார்த்தாண்டம் வர்த்தக சங்க தலைவர் அல்அமீன் தலைமையில் நிர்வாகிகள் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ் எம்எல்ஏவை சந்தித்து முறையிட்டனர்.இதையடுத்து மார்த்தாண்டம் வந்த எம்எல்ஏ பாலப்பணிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு, வர்த்தகர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் கூறியது: குமரி மாவட்டத்தில் நெடுமங்காடு - ஆரல்வாய்மொழி சாலை, மேற்கு கடற்கரை சாலையுடன் தற்போது 4 வழிச்சாலை பணிகளும் நடந்து வருகிறது. இதனால் இந்த அளவுக்கு பணத்தை செலவு செய்து மார்த்தாண்டத்தில்  பாலம் தேவை இல்லை.

 இந்த பாலத்திற்காக செலவழிப்பதில் சிறிய தொகையை கொடுத்து ஆக்ரமிப்புகளை அகற்றி போதிய அளவு அகலத்தில் சாலையை சீரமைத்திருந்தால் போதுமானதாக இருந்திருக்கும். மாறாக பல கோடி ரூபாய் திட்டத்தை கொண்டு வந்து  கடந்த ஒன்றரை வருடமாக பொதுமக்களையும், வர்த்தகர்களையும் பாடாய் படுத்தி வருகின்றனர். இதேப்போன்ற நிலை தான் பார்வதிபுரத்திலும் உள்ளது.

இந்த 2 பாலப்பணிகளால் மேற்கு மாவட்டமும், கிழக்கு மாவட்டமும் துண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாலப்பணிகள் ஜூலைக்குள் முடியும் என்று  மத்திய அமைச்சர் கூறுகிறார். ஆனால் இதுவரை 50 சதவீத பணிகள் தான் முடிந்துள்ளது. பல இடங்களில் இதுவரை தரைமட்ட பில்லர் அமைக்கும் பணிகள் கூட முடியவில்லை.
 சில இடங்களில் மாதக்கணக்கில் பணிகள் தொடங்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இன்னும் ஒரு வருடம் ஆனாலும் கூட இந்த பாலப்பணிகள் முடியாது.   குறிப்பிட்ட இந்த கால கெடுவுக்குள் உறுதியான கான்கிரீட் பாலமே அமைத்திருக்கலாம். மாறாக ஒரே ஒப்பந்த நிறுவனத்திற்கு மார்த்தாண்டம், பார்வதிபுரம் பால பணிகளை பேக்கேஜ் முறையில் வழங்கி உள்ளனர்.

 பாலத்தின் உறுதித்தன்மையே கேள்விக்குறியாக உள்ளது. பொதுமக்களின் அச்சத்தை  போக்க வேண்டியது அரசு துறை அதிகாரிகளின் கடமை ஆகும். ஆனால் அதிகாரிகளை  தொடர்பு கொண்டால் யாரும் சரியாக பதில் கூறுவதில்லை. எனவே பாலப்பணிகளை கூடுதல் பணியாளர்களுடன் விரைந்து முடிக்க வேண்டும். அடுத்த மாதத்தில் ஓண சீசன் தொடங்க உள்ளது. அதை தொடர்ந்து வாவுபலி கண்காட்சியும் தொடங்குகிறது. எனவே சாலையை செப்பனிட்டு வாகன போக்குவரத்தை விரைந்து தொடங்க வேண்டும். இல்லையெனில், சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் வர்த்தகர்களை திரட்டி மார்த்தாண்டத்தில் எனது தலைமையில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...