×

நாச்சியார்கோயிலில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம்

திருவிடைமருதூர், ஜூன் 21:  நாச்சியார்கோயிலில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் நாச்சியார்கோயிலில்  புகழ்மிக்க ஆகாச மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில்  15 நாட்கள் பெரும் திருவிழா நடைபெறும். விழாவையொட்டி 25 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பேருந்துகள் மாற்று வழிப்பாதையில் இயக்கப்படும். அந்த வகையில் நாச்சியார்கோயில் தெற்கு வீதி, வடக்குவீதி சாலைகளின் வழியாக பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்ளும் 25 நாட்களுக்கு இயக்கப்படும்.
இந்நிலையில் விழாவிற்கு முன் மோசமாக உள்ள இச்சாலையை சீரமைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சாலைமறியலில் ஈடுபடபோவதாக அனைத்து கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த மே மாதம் 3ம்தேதி தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தாசில்தார் ஜூன் 18ம்தேதிக்குள் சாலைகள் சீரமைக்கப்படும் என உறுதியளித்திருந்தார். இதனை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது.

சீரமைப்புக்கான எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நாச்சியார்கோயில் அண்ணாசிலை அருகே தொடர் உண்ணாவிரதம் தொடங்கினர். உண்ணாவிரத போராட்டத்திற்கு மக்கள் உரிமை கூட்டணி ஒருங்கிணைப்பாளர்  சாத்தையன் தலைமை வகித்தார். திமுக பொறுப்பாளர்கள் உமாபாரதி, சிட்டிபாபு, மனிதநேயமக்கள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜ்முகமது, மதிமுக மாவட்ட பிரதிநிதி பாண்டுரங்கன், ஊராட்சி கழக செயலாளர் செல்லப்பாண்டியன், நகர செயலாளர் ஜெகதீசன், தேமுதிக ஒன்றிய செயலாளர் மகேஷ், நகர செயலாளர் பக்கிரிசாமி, மாநில காங்கிரஸ் பேச்சாளர் ராஜேந்திரன், பாமக மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.    

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...