×

பட்டுக்கோட்டை ஆர்.வி.நகரில் திறப்புவிழா கண்டு ஓராண்டாகியும் மூடியே கிடக்கும் புதிய ரேஷன்கடை

பட்டுக்கோட்டை, ஜூன் 21: பட்டுக்கோட்டை சீனிவாசன் நகர் குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் சங்க தலைவர் ரெங்கசாமி தலைமையில் நடந்தது. சங்க செயலாளர் காளிமுத்து, பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: சீனிவாசன்நகர் பகுதியிலுள்ள வடிகால் வாய்க்காலில் ஆங்காங்கே சாக்கடை தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க வாரம் இருமுறை வடிகால் வாய்க்காலை சுத்தம் செய்ய வேண்டும். பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நாடியம்மன் கோயில் வரை சாலை மிகவும் பழுதாகி சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த பள்ளங்களில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கவனிக்காமல் கீழே விழுந்து காயங்கள் ஏற்படுவதுடன், வாகனங்களும் பழுதாகி விடுகிறது.

உடனே பொதுமக்கள் நலன்கருதி போர்க்கால அடிப்படையில் நகராட்சி ஆணையர் சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து சுமார் 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எனவே கோயில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடைபெற பட்டுக்கோட்டை எம்எல்ஏ மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது சீனிவாசன்நகர் பகுதி பொதுமக்கள் அண்ணாநகர் ரேஷன்கடையில் பொருட்கள் வாங்கி வருகிறார்கள். தூரத்தில் உள்ள அண்ணாநகர் ரேஷன் கடையிலிருந்து சீனிவாசன்நகர் ரேஷன்கார்டுகளை பிரித்து திறப்பு விழா முடிந்து சுமார் ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆர்.வி.நகரில் உள்ள புதிய இன்னும் திறக்காமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து கடையை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்கத்தை சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்