×

முத்ரா வங்கி கடனுதவி திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்

காரைக்கால், ஜூன் 21: முத்ரா வங்கி கடனுதவி திட்டத்தை காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த கிராமமக்கள் பயன்படுத்தி சுய வருவாமனத்தை பெருக்கி கொள்ள வேண்டுமென புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. மகளிர் சுயஉதவி குழுவினரின் பணிகள், அரசின் திட்டங்களை எவ்வாறு பயன்படுத்தி கொள்வது என்பது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா பேசினார். புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது: மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. கடனை பெறுவதற்கு இத்திட்டத்தில் எளிய வழிமுறைள் உள்ளதால் சிறு தொழில் முதல் நடுத்தர தொழில் வரை நகரம் மற்றும் கிராம மக்கள் இத்திட்டத்தின் உதவியை பெற்று தொழில் செய்ய முடியும். எனவே இத்திட்டத்தை கிராம மககள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதன் மூலம் குடும்பத்தின் சுமை வெகுவாக குறையும். இதில் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அம்பகரத்தூர், நல்லம்பல், சேத்தூர் பகுதியில் வீடு, நிறுவனங்களில் நேரடியாக குப்பைகள் சேகரிப்பு செய்யப்பட்டு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நிதி பங்களிப்புடன் மகளிர் குழுவினர் ஊதியம் பெறும் வகையில் இந்த திட்டத்தை மீண்டும் செம்மையாக கொண்டுவர ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் மகளிர் குழுவினர் தீவிரமாக பங்கெடுக்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் உள்நோயாளிகள், புறநோயாளிகளில் 40 சதவீதத்தினர் மது பழக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால் வந்திருப்பது மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்படுகிறது. அத்தகைய மது பழக்கத்தால் ஒட்டுமொத்த குடும்பமே சீரழிந்து விடுகிறது. இதனால் அரசின் நோக்கம் சிதைகிறது. எனவே ஆண்கள் மது பழக்கத்தை கைவிடுவதற்காக சிறந்த நிபுணர்களை கொண்டு கவுன்சலிங் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களில் இதற்கான கவுன்சலிங் நடத்தப்படும். மது பழக்கம் கொண்டவர்கள் தம்பதியராக பங்கேற்க வேண்டும் என்றார்.திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...