×

விவசாயிகள் குற்றச்சாட்டு பொதுமக்களின் புகாரை தொடர்ந்து காரைக்கால் மளிகை, பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு

காரைக்கால், ஜூன் 21: பொதுமக்களின் புகாரையடுத்து காரைக்காலில் உள்ள மாம்பழக்கடை, மளிகை மற்றும் உணவங்களில் புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மளிகை கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பதாகவும், ரசாயன கற்களால் பழுக்க வைக்கப்பட்ட மாங்கனிகளை விற்பதாகவும், மாங்கனி திருவிழா நெருங்கும் நேரத்தில் இது அதிகரிக்ககூடும். எனவே மாவட்ட நிர்வாகம் மக்கள் நலனில் அக்கறை கொண்டு திடீர் ஆய்வு நடத்த வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் காரைக்கால் மாதாகோவில் வீதி, மார்க்கெட் வீதி, பாரதியார் வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள பழக்கடை மற்றும் குடோன்களில் புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன், குடிமைப்பொருள் அதிகாரி ரேவதி மற்றும் நகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக இருந்த மாங்கனிகள் மற்றும் பழவகைகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் மாங்கனி திருவிழாவின்போது தரமான மாங்கனிகளை விற்பனை செய்ய வேண்டும். ரசாயன கற்களால் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்தால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர்.

இதைதொடர்ந்து மளிகை மற்றும் உணவகங்களிலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து காலாவதியான பொருட்கள் விற்பதை வியாபாரிகள் தவிர்க்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் கூறியதாவது: பொதுமக்கள் மளிகை மற்றும் பொருட்களை காலாவதி தேதி பார்த்து வாங்க வேண்டும். வாங்கும் பொருட்களுக்கு பில் அவசியம் வாங்க வேண்டும். மாங்கனிகளை பார்த்து வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கும் மாங்கனிகளை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைத்து தோல் நீக்கி உண்ண வேண்டும் என்றார்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறையின் கிளை காரைக்காலில் இருந்தாலும் அங்கு ஒரு அதிகாரியும் இல்லை. மாங்கனி திருவிழா நடைபெறும் நேரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் பெயரளவில் வந்து ஆய்வு செய்து செல்கின்றனர். இனி வரும் காலங்களில் அதுபோல் இல்லாமல் ஆண்டுதோறும் காரைக்கால் கிளையில் காலியாக உள்ள அதிகாரிகளை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்