×

பயிர் காப்பீட்டுத்தொகை குறைத்து அறிவிப்பு சாட்டியக்குடியில் விவசாயிகள் மறியல்

கீழ்வேளூர், ஜூன் 21: பயிர் காப்பீட்டுதொகை அளவை குறைத்து அறிவித்ததால் சாட்டியக்குடியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது.நெல் சாகுபடி செய்ய கூட்டுறவு வங்கி, தேசிய வங்கியில் விவசாயிகள் கடன் பெறுவர். கடன் பெறும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும்போதே காப்பீட்டுத்தொகை கட்டப்படும். கடன் பெறாத விவசாயிகள், கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீட்டுத்தொகை செலுத்தலாம். பிர்கா வாரியாக காப்பீடு கணக்கீடு செய்யப்பட்டு ஒரே அளவில் பயிர் பாதிப்பு குறித்த அளவீடு கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய காப்பீட்டு திட்டத்தின்படி தற்போது விஏஓ கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்கள் தோறும் அறுவடை சோதனை செய்யப்பட்டு கிராமங்கள் வாரியாக தனித்தனியாக பயிர் பாதிப்பு குறித்து அறிவிக்கப்பட்டு 60 நாட்களுக்குள் காப்பீட்டுத்தொகை வழங்கப்படும், காப்பீட்டுத்தொகையை தேசிய வங்கி, கூட்டுறவு வங்கி, காப்பீட்டு நிறுவனத்தில் நேரடியாகவோ அல்லது காப்பீட்டு நிறுவனத்தின் சேவை மையத்திலோ கட்டலாம் என்று அறிவிக்கப்பட்டு கடந்தாண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் கடந்தாண்டு கிராமங்கள் தோறும் அறுவடை சோதனை செய்யப்பட்டது. இதில் 2016-2017ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீட்டுத்தொகை கடந்தாண்டு மார்ச், ஏப்ரல் மாதத்துக்குள் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் கெடு முடிந்து ஓராண்டாகியும் காப்பீட்டுத்தொகை வழங்கவில்லை.

கீழ்வேளூர் ஒன்றியம் ஆதமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு உட்பட்ட கொடியலத்தூர், வலிவலம், ஆதமங்கலம், தென்மருதூர், காருக்குடி, கிள்ளுக்குடி, 105 மாணலூர், சாட்டியக்குடி, கோயில்கண்ணாப்பூர் ஆகிய 9 கிராமங்களை சேர்ந்த கடன்பெற்ற விவசாயிகள் 760 பேர் மற்றும் கடன் பெறாத 1,471 விவசாயிகள் என 2,231 விவசாயிகள் 4,862 ஏக்கர் நிலத்துக்கு நெல் பயிருக்கு காப்பீட்டுத்தொகை 2016-2017ம் ஆண்டுக்கு கட்டியுள்ளனர். 2016-2017ம் ஆண்டு கடும் வறட்சியால் பயிர்கள் கருகியது. இந்த 9 கிராமத்துக்கும் காப்பீட்டுத்தொகை அளவு குறித்து தெரிவிக்காததால் 9 முறை போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து ஆதமங்கலம் கூட்டுறவு வங்கிக்கு உட்பட 9 கிராமத்துக்கும் 100 சதவீதம் என இழப்பீட்டுத்தொகை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டு தொகையின் அளவை கொடியலத்தூர் 51, வலிவலம் 28, ஆதமங்கலம் 55, தென்மருதூர் 51, காருக்குடி, கிள்ளுக்குடி 55, மாணலூர் 53, சாட்டியக்குடி 29, கோயில்கண்ணாப்பூர் 51, மோகனூர் 44 சதவீதம் என்று அறிவித்தது இதனால் கீழ்வேளூர்- கச்சனம் சாலை சாட்டியக்குடி கடைத்தெருவில் அனைத்து விவசாய சங்கம் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் அம்பிகாபதி தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.

காவிரி பாசன பாதுகாப்பு சங்க தலைவர் சேரன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொருளாளர் புருஷோத்தமதாஸ், துணைத்தலைவர் பக்கிரிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் ஜெயராமன்,  திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜிவானந்தம் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கீழ்வேளூர் தாசில்தார்   தையல்நாயகி, இன்ஸ்பெக்டர்கள், சாமிநாதன், சிவராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வரும் 30ம் தேதிக்குள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பேசி அறிவித்த 100 சதவீதம் பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது