×

விவசாயிகளுக்கு அறிவுரை மண்வளம் காத்து அதிக மகசூல் பெற மண்வள அட்டை பெற வேண்டும்

நாகை, ஜூன் 21: நாகை மாவட்டத்தில் மண்வளம் காத்து அதிக மகசூல் பெற விவசாயிகள் கண்டிப்பாக மண்வள அட்டை பெற வேண்டுமென கலெக்டர் சுரேஷ்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க செய்வதில் நீர்வளம், மண் வளம், மண்ணின் தன்மை ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன. பயிர் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணூட்ட சத்துகள் உள்ளிட்ட 20 வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. இச்சத்துக்கள் சரியான அளவில் இருந்தால் தான் நல்ல மகசூலை பெற முடியும். ஒரு பயிருக்கான உரத்தேவையை கணக்கிட மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு விவரம் அறிய மண் பரிசோதனை செய்வது மிக அவசியம். மண் பரிசோதனை மூலம் நிலத்தில் உள்ள சத்துக்களின் அளவு அறிந்து உரமிட மண்வள அட்டை திட்டம் மூலம் தற்போது விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

     நாகை மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் முதல் சுழற்சியில் இதுவரை 1.54 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2ம் கட்டமாக இதுவரை 30,294 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2018-19ம் ஆண்டில் 1.54 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மண்வள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள உர சிபாரிசின்படி பயிருக்கு தேவையான உரம் இடுவதால் உரச்செலவு குறைவதுடன், மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது. சமச்சீரான உரம் இடுவதால் மகசூல் கணிசமாக அதிகரிக்கும். இதனால் விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும். இனிவரும் காலங்களில் மண்வள அட்டையில் சிபாரிசின் அடிப்படையில் மட்டுமே விவசாயிகள். விற்பனையாளர்களிடம் இருந்து விற்பனை முனைய கருவி மூலம் பெற திட்டமிடப்பட்டு வருகிறது.

எனவே அனைத்து விவசாயிகளும் மண்வள அட்டை வைத்திருப்பது அவசியமாகும். விவசாயிகள் மண்வள அட்டையை பெற்று அதன் பயன்பாட்டை அறிய மண்வள அட்டையின் அடிப்படையிலேயே உரமிட்டு, மண் வளம் காத்து அதிக மகசூல் பெற வேண்டும். மண்வள அட்டையை பெற தங்களுடைய வட்டார வேளாண்மை உதவி இயக்குனரையோ அலலது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அணுகி பயன்பெறலாம். இவ்வாறு நாகை கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் முதல் சுழற்சியில் இதுவரை 1.54 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2ம் கட்டமாக இதுவரை 30,294 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2018-19ம் ஆண்டில் 1.54 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்