×

காவல்துறைக்கு வரும் புகார் மீது உடனடி தீர்வு காண வேண்டும்

புதுச்சேரி, ஜூன் 21: புதுச்சேரி காவல்துறை குறித்த ஆவணப்பட வெளியீட்டு விழா கடலூர் சாலையில் உள்ள பிரவிடன்சி மாலில் நேற்று நடந்தது. இவ்விழாவில் கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், அரசு செயலர் ஸ்ரன், டிஜிபி சுனில்குமார் கவுதம், ஐஜி சுரேந்தர் சிங் யாதவ், சீனியர் எஸ்பி அபூர்வா குப்தா, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். சுமார் 30 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த ஆவணப்படத்தில் புதுவையில் நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளான ரோந்துபணி, நவீன யுக்திகள், போலீசாருக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்து விளக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினரின் குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் தொழிற்பயிற்சி குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தை பார்த்த பின் கவர்னர் கிரண்பேடி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காவல்துறையின் செயல்பாடுகள் மக்களை சென்றடைய இந்த ஆவணப்படம் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அமைதியையும், தூய்மையையும் விரும்புகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளை காட்டிலும் புதுச்சேரி அமைதியும், தூய்மையும் உள்ள இடமாக உள்ளது. காவல்துறைக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும்.
இந்த ஆவணப்படம் உருவாக காரணமாக இருந்த டிஜிபி மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆவணப்படம் மக்களை சென்றடைய ராஜ்நிவாஸ் இணையதளம், புதுச்சேரி காவல்துறை இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...