×

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து 15 மையங்களில் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,  ஜூன் 21: பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து  புதுவையில் 15 மையங்களில் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியினர் ஆர்ப்பாட்டம்  நடத்தி வருகின்றனர். காமராஜர் சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் கேஸ்  சிலிண்டருக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மத்திய  பாஜக அரசின் 4 ஆண்டு கால ஆட்சியில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ்  விலை உயர்வுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை இடதுசாரிகள் நடத்தி  வருகிறது. அதன்படி புதுவையில் நேற்று 15 மையங்களில் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரக் குழு சார்பில் அமுதசுரபி  எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு நகர செயலாளர் ஜீவானந்தம், துணை  செயலாளர்கள் சிவகுருநாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர்.  முன்னாள் அமைச்சர் விசுவநாதன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில்  பெண்கள், ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு  மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.காமராஜர் சாலையில்  பிருந்தாவனத்தில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்  100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை  அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதனால் அங்கு சிறிதுநேரம்  பரபரப்பு நிலவியது.

அரியாங்குப்பத்தில் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம்  அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு தொகுதி செயலாளர் பூபதி தலைமை தாங்கினார்.  ஏஐடியுசி அபிஷேகம், மாநில நிர்வாகக் குழு சரளா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை  உயர்வுக்கு எதிராக முழக்கமிட்டனர்.தட்டாஞ்சாவடி தொகுதிக்குழு சார்பில்  பாக்கமுடையான்பேட் ஏர்போர்ட் சாலை, ஜீவா காலனி சந்திப்பில் நடைபெற்ற  போராட்டத்துக்கு தொகுதி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு  உறுப்பினர் ஹேமலதா, எழிலன், தொகுதி துணை செயலாளர் செல்வம், பொருளாளர்  தனஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சலிம், மாநில  நிர்வாகக் குழு உறுப்பினர் சேதுசெல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சண்முகாபுரம் வழுதாவூர் சாலையில் மாலையில் நடைபெற்ற போராட்டத்துக்கு  கதிர்காமம் தொகுதி செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார்.
இந்தியகம்யூனிஸ்ட்  மாநிலசெயலாளர் சலீம் கண்டன உரையாற்றினார். இதில் மாநிலக்குழு  உறுப்பினர்கள் பாலகங்காதரன், நாகவள்ளி, தொகுதி துணை செயலாளர்கள்  மகாலிங்கம், சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கம்யூனிஸ்ட்  கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
 இதுதவிர இந்திரா நகர், உழவர்கரை,  காலாப்பட்டு, லாஸ்பேட்டை, நெல்லித்தோப்பு, வில்லியனூர், பாகூர், காரைக்கால்  உள்பட மொத்தம் 15 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்  நடத்துகின்றனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...