×

மாட்டுவண்டி மணல் குவாரிக்கு எதிர்ப்பு அதிகாரிகளை கிராமமக்கள் முற்றுகை

விருத்தாசலம், ஜூன் 21: விருத்தாசலம் அருகே மணவாளநல்லூர் மணிமுக்தாற்றில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைப்பதற்கான நடவடிக்கையில் கடந்த 3 மாதத்துக்கு முன்பாக விருத்தாசலம் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் குவாரி அமைப்பதற்காக மணிமுக்தாற்றில் உள்ள பகுதிகளை பார்வையிட்டு வந்தனர். அதன்படி நேற்று அதிகாரிகள், மணிமுக்தாற்றில் பார்வையிட்டு அளவிடும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மணவாளநல்லூர், பரவலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு மாட்டுவண்டி மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இப்பகுதியில் மாட்டுவண்டி மணல் குவாரி இல்லாததால் தினமும் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிச் செல்கின்றனர். இதுகுறித்து காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். ஆனால் குவாரி அமைப்பதற்கான பணிகளை மட்டும் மிகவும் உற்சாகத்துடன் வந்து செய்கிறீர்களே எனவும், இப்பகுதியில் மணல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் முழுவதும் சீரழிந்துவிடும், அதனால் எங்கள் பகுதியில் குவாரி அமைக்கக்கூடாது எனவும் கூறி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தியும் சமாதானம் அடையாததால் மாட்டுவண்டி மணல் குவாரி அமைப்பதை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு