×

சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீர் கடலூர் நகரத்தில் சுகாதார சீர்கேடு

கடலூர், ஜூன் 21: கடலூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பெற்றும் சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீரால் நகரில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. கடலூர் நகராட்சி 45 வார்டு பகுதிகளை கொண்டது. நகரில் கழிவுநீரை அகற்றும் வகையில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டு சேகரிக்கப்படும் கழிவுநீர் தேவனாம்பட்டினத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ஆனால் 45வது வார்டு பகுதியிலும் இத்திட்டத்தின் குழாய் அமைப்பு பணி நிறைவு பெறாமல் இருப்பது ஒருபுறம் இருக்க மேன்ஹோல் மற்றும் குழாய் அமைக்கப்பட்ட பல இடங்களில் கழிவுநீர் முறையாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லாமல் தேங்கி, நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் வழிந்தோடி வருகிறது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் போல் கழிவுநீர் ஓடி மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இதுபோன்ற நிலைபாட்டால் வீட்டு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள பலரது நிலை அவதிக்குள்ளாகி வருகிறது. திருப்பாதிரிபுலியூர், முதுநகர் என நகரின் முக்கிய பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீர் குழாய்களிலேயே தேங்கி, வீட்டிலிருந்து கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கும் அவல நிலை நீடிக்கிறது. முறையான பணி மேற்கொள்ளாததால் இதுபோன்ற அவல நிலை உள்ளது என சம்பந்தப்பட்ட துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நகராட்சி தரப்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு வாங்கப்பட்ட கழிவுநீர் அகற்றும் வாகனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திட்டத்தின் செயல்பாடு முழுமை அடையாமல் உள்ளதால் வீணாகி வருகிறது. இதற்கிடையே நகரில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு வழங்க தயாராக பல்வேறு வீட்டு மற்றும் பொது நிறுவன உரிமையாளர்கள் இருந்தாலும் செயல்படாத திட்டத்தால் திகைத்து போயுள்ளனர். பாதாள சாக்கடையில் நகரின் பல்வேறு இடங்களில் கழிவுநீர் சாலைகளில் வெளியேறிவருவது தொடர்பாக புகார் தெரிவித்தும் நகராட்சி கண்டுகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.
கடலூர் செல்லங்குப்பம் சேர்மன் கோவிந்தசாமி நகரில் பாதாள சாக்கடை திட்ட குழாயில் கழிவுநீர் வெளியேறி வருவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. துர்நாற்றத்தால் அந்த பகுதி மக்கள் குடியிருப்பை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.திடீர் மழை பெய்து வரும் நிலையில் கழிவுநீருடன் மழை வெள்ள நீரும் கலந்து நோய் பரவும் அபாயம் உள்ளது. சுகாதாரத்தின் முக்கியத்துவம் மற்றும் மக்களின் அடிப்படை பிரச்னைகளை கருத்தில் கொண்டு சாலைகளில் கழிவுநீர் வழிந்து ஓடாத வகையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை முறையாக சீரமைக்க வேண்டும் என்று கடலூர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்