×

விதிகளை மீறி இயங்கும் ஆட்டோக்களை கண்டறிய அதிகாரிகள் சிறப்பு தணிக்கை

கிருஷ்ணகிரி, ஜூன் 21: கிருஷ்ணகிரியில் விதிகளை மீறி இயங்கும் ஆட்டோக்களை கண்டறிய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள வேலூர் சரக துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.  கிருஷ்ணகிரி நகரில் அனுமதியின்றி இயக்கப்படும் ஆட்டோக்களால் அதிக விபத்துகள் ஏற்படுவது குறித்து சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன், போக்குவரத்து துறை ஆணையருக்கு புகார் மனு அனுப்பியிருந்தார். அதில், கிருஷ்ணகிரி நகரில் பெரும்பாலான காஸ் ஆட்டோக்கள் அனுமதி பெறாமலேயே இயக்கப்படுகிறது.

அத்துடன் தகுதி சான்றிதழ் பெறாமலும், இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் குடிபோதையிலும், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதும், இதனால் நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்கள் பாதிப்புக்குள்ளாவது பற்றியும், ஷேர் ஆட்டோ என்ற பெயரில் 7 முதல் 10 பேர் வரையில் ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படும் ஆபாயம் உள்ளது. விபத்து ஏற்பட்டால் இழப்பீடு கூட பெற முடியாத வகையில் தான் பெரும்பாலான ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. எனவே, இதுபோன்ற ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அவ்வாறு விதிகளை மீறி இயங்கும் ஆட்டோக்களை கண்டறிய மோட்டார் வாகன ஆய்வாளர்களை கொண்டு சிறப்பு தணிக்கை மேற்கொள்ள, வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு, வேலூர் சரக துணை போக்குவரத்து ஆணையர் பொன்.செந்தில்நாதன் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
× RELATED பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழா