×

தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்த சீமை கருவேல மரங்கள் வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை, ஜூன் 21: தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தொண்டியில் இருந்து மதுரைக்கு திருவாடானை காளையார்கோயில் சிவகங்கை வழியாக  பல வருடங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இவ்வழியில் அதிகளவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தற்போது இந்த சாலையின் இருபுறங்களிலும் சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக படர்ந்து கிடக்கின்றன. இதனால் நடந்து செல்பவர்களும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எதிரே வாகனம் வரும்போது விலகிச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

முன்பு சாலையோர முள்செடிகள் சாலை பணியாளர்களை கொண்டு அகற்றப்பட்டு வந்தது. கடந்த ஓராண்டாக இந்த சாலை தனியார் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சாலையில் படர்ந்து கிடக்கும் முள்செடிகளை அகற்றாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இச்சாலையில் பாரதி நகரில் இருந்து சி.கே.மங்கலம் வரையிலும், கடம்பா குடியிலிருந்து அச்சம் குடி மற்றும் பெருமானேந்தல் ஆகிய ஊர்கள் வரை முள் செடிகள் படர்ந்துள்ளது. இவற்றை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை