×

கேஸ் விநியோகத்தில் தொடரும் குறைபாடுகள்

பரமக்குடி, ஜூன் 21: கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் தொடரும் குறைபாடுகளை அதிகாரிகள் சரி செய்வதுடன், விபத்து விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் கூடுதல் கவனம் காட்ட வேண்டும் என்று நுகர்வோர்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக சமையல் கியாஸ் மாறி இருக்கிறது. கிராமங்களிலும் சமையலுக்கான மிக முக்கிய எரிபொருளாக கேஸ் இருக்கிறது. ஆனால் இந்த கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் பல்வேறு குறைபாடுகள் தொடர்கதையாகி வருகிறது. வீட்டிற்கு சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும்போது, பில் தொகையை விட ரூ.60 வரை அதிக பணத்தைக் கேட்டு வாங்குகின்றனர். இந்த கூடுதல் தொகை தர மறுத்து, சரியான பணத்தை கொடுத்தால், அந்த சிலிண்டரை வீட்டு வாசலிலேயே போட்டு விட்டு செல்வது நடக்கிறது.

கேஸ் கசிவு போன்ற காலத்தில், சிலிண்டர் டெலிவரி செய்பவர்களையே நிறுவனங்கள் சரி செய்வதற்கென அனுப்புகின்றனர். அப்போது, அந்த பணியாளர் விரைந்து வந்து கசிவை சரி செய்யாமல் காலம் தாழ்த்துவதும் நடக்கிறது. இதனால் வேறு வழியின்றி சிலிண்டருக்கு கூடுதல் தொகை கொடுக்கின்றனர். மேலும், வீட்டிற்கு கொண்டு வரப்படும் சிலிண்டர் சீலிடப்பட்டிருக்கிறதா என்பதை நாம் அவசியம் கவனிக்க வேண்டும். இதனை சிலிண்டர் கொண்டு வருபவர் நமக்கு காட்ட வேண்டும். மேலும், சிலிண்டர் கேஸ் எடை அளவு சரியாக இருக்கிறதா, கசிவு இருக்கிறதா என்பதையும் அவர் உறுதிப்படுத்த வேண்டும்.

அடுப்பின் ரெகுலேட்டருடன் சிலிண்டரை இணைத்து நன்றாக எரிவதை ஊழியர் நமக்கு காட்ட வேண்டியது கடமை. அந்த ஊழியர், சிலிண்டரில் உள்ள பின், ஓரிங் போன்றவற்றில் கசிவுகள், வாசர் சேதமடைந்திருப்பது போன்றவற்றையும் சோதனை செய்து பார்த்த பிறகே, நமக்கு சிலிண்டரை கொடுத்து விட்டுப் போக வேண்டும். சிலிண்டர் அடிப்புறத்தில் துருப்பிடித்து, ஓட்டையாகி அதன் மூலமும் கேஸ் கசிவு ஏற்பட்டு விபத்துகளுக்கு வழிவகுக்கிறது. அதனையும் ஊழியர் சோதித்துப் பார்த்து நம்மிடம் சிலிண்டரை வழங்க வேண்டும். ஆனால், இப்படி எந்த பணியையும் அவர் மேற்கொள்வதில்லை.
நுகர்வோர் மைய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘வீட்டுக்கு சிலிண்டர் போட வருபவர் கட்டாயம் தன்னுடன் எடை இயந்திரம் ஒன்றை அவசியம் கொண்டு வர வேண்டும். அந்த இயந்திரம் மூலம் சிலிண்டரின் சரியான எடையை நிறுத்துக் காட்ட வேண்டும். ஆனால் எந்த கேஸ் ஏஜென்ட்களும் தங்கள் ஊழியரிடம் எடை இயந்திரத்தைக் கொடுத்தனுப்புவதில்லை. காரணம் பல சிலிண்டர்கள் குறைந்த எடை அளவிலேயே கேஸ் நிரப்பப்படுகிறது. இதுபோலவே சிலிண்டரில் உள்ள பின், ஓரிங் உள்ளிட்ட சிலிண்டர் பாகங்களில் கேஸ் கசிவைக் கண்டறிவதற்கான ‘கேஸ் டிடெக்டர்’ கருவியையும் இந்த ஊழியர் தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. ஆனால் சிலிண்டர் கொண்டு வருபவரிடம் இக்கருவி இருப்பதில்லை’’ என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை