×

புகார்பெட்டி முதுகுளத்தூரில் ஊரணியை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கோயில் நிலம் மீட்க கோரிக்கை விரைவில் தீர்வு ஏற்படுமா?

சாயல்குடி, ஜூன் 21: முதுகுளத்தூர் சரவணபொய்கை ஊரணியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றி, கோயில் இடத்தை மீட்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் அருகில் நூற்றாண்டு பழமையான சுப்ரமணியர் கோயில் உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயிலுக்கு அருகில் சுமார் 5 ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளது. இக்கோயிலின் தெப்பக்குளம் சரவண பொய்கை என அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக புதர்மண்டி, கழிவுநீர் தேங்கி, ஊரணி தூர்ந்து போய் கிடந்தது. இந்த ஊரணியை கடந்த 2013ம் ஆண்டு நபார்டு வங்கி நிதி உதவியுடன் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு, கரையை மேம்படுத்தி, அதில் பேவர்பிளாக் கற்கள் பதித்து பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. நடைபயிற்சி பாதையை சுற்றி கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதில் கிழக்குபுறம் அமைந்துள்ள கம்பி வேலியை, தேரிருவேலி முக்கில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து சுற்றுச்சுவரை கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மிக அருகில் அங்கன்வாடி மையம் மற்றும் கழிவறை வளாகம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் துர்நாற்றத்தால் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அருகில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. இதன் அருகில் அரசு இடத்தை ஆக்கிரமித்து, தற்காலிக சுற்றுச்சுவர் அமைத்தும், கால்நடைகளை கட்டிபோட்டும் ஆக்கிரமித்துள்ளனர். தெற்குபுறம் வாடகை வாகனங்கள் நிறுத்துமிடம் சிறுநீர் கழிக்கும் இடமாகவும், கிழக்குபுறம் மீன், கோழி, மாடு, ஆட்டின் இறைச்சி கழிவுகளை கொட்டி வருவதாலும் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு நாட்கணக்கில் கிடக்கும் கழிவுகள், துர்நாற்றத்தால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து முதுகுளத்தூர் செந்தில் கூறும்போது, ‘‘சரவண பொய்கை ஊரணியை பின்புறம் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. இதனால் ஊரணி கழிவுநீர் வெளியேறும் பாதை காணாமல் போய் விட்டது. வணிக வளாகத்தின் முகப்புகளால் சாயல்குடி, பரமக்குடி சாலையில் செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டு, தேரிருவேலி முக்கில் அடிக்கடி டிராபிக் ஜாம் ஏற்பட்டு, சிறு, சிறு விபத்தும் ஏற்பட்டு வருகிறது.
1998ம் ஆண்டு உதவி கலெக்டராக இருந்த உதயசந்திரன் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை அகற்ற உத்தரவிட்டார், அப்போது இடைகால தடையால் ஆக்கிரமிப்பு அகற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டது. சுமார் 20 ஆண்டுகள் ஆகியும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறை, பேரூராட்சி நிர்வாகம் முன்வராததால் அரசுக்கு சொந்தமான கோயில் இடம் காணாமல் போய் வருகிறது. நிறுவன ஆக்கிரமிப்புகளை காரணம் காட்டி ஊரணியை சுற்றி நான்கு புறமும் தனியார் ஆக்கிரமித்து வருவது தொடர்கிறது. எனவே ஊரணியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்கவேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை