×

பரமக்குடி பகுதியில் பிஎஸ்என்எல் சேவை கிடைப்பதில் சிக்கல்

பரமக்குடி, ஜூன் 21: பரமக்குடி மணி நகர் பகுதியில் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இன்டெர்நெட் இணைப்பு  கிடைக்காததால் பொதுமக்களும் அரசு துறை அதிகாரிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பரமக்குடி மணிநகர் பகுதியில் ஆர்டிஓ அலுவலகம், வணிகவரித் துறை அலுவலகம்,  யூனியன் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களும், டிராக்டர், டூவிலர், கார் விற்பனை செய்யும் பல்வேறு ஷோரும்களும் உள்ளன. அப்பகுதியில் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இன்டெர்நெட் இணைப்பு கிடைப்பதில்லை. தற்போது அனைத்து அரசு தரப்பு செய்திகளும் இன்டெர்நெட் மூலமாக கிடைப்பதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்களிடையே கம்ப்யூட்டர், இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளது.
பிராட்பேண்ட் இணைப்பு கிடைக்காத நேரத்தில் பிஎஸ்என்எல் 3ஜி சேவையை பலர் பயன்படுத்தி வந்தனர். அதன் வேகமும் குறைவாகவே கிடைக்கிறது. இதனால் தகவல்களை அப்லோடு செய்யவோ, டவுன்லோடு செய்யவோ முடியவில்லையென அரசு அதிகாரிகள் புலம்பி வருகின்றனர். இப்பகுதியில் விளையும் மிளகாய் உள்ளிட்ட விலைகளை தெரிந்து கொள்ள வியாபாரிகளும் அதிகளவில் இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.

தற்போதுள்ள 3ஜி முறையில் உள்ள வேகம் குறைவு காரணமாக இன்டர்நெட் பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் தனியார் 4ஜி இன்டர்நெட் சேவையை பெற்று கம்ப்யூட்டரை பயன்படுத்தி வருகின்றனர். சம்மந்தப்பட்ட பிஎஸ்என்எல் டெலிபோன் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விரைவில் அனைவருக்கும் பிஎஸ்என்எல் இன்டெர்நெட் வசதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர்.மணி நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் கூறுகையில், பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவை இப்பகுதியில் முறையாக கிடைக்காததால் 3ஜி சேவையை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். அதுவும் வேகத்திறன் குறைவாகவே கிடைக்கிறது. இதுதொடர்பாக பரமக்குடி டெலிபோன் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டால் முறையான விளக்கம் அளிக்க மறுக்கின்றனர். இதற்கு ஒரே தீர்வு பிராட்பேண்ட் இணைப்பை அதிகப்படுத்துவது தான். இதுகுறித்து டெலிபோன் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை