×

ரயில்வே குடியிருப்பு பகுதியை ஆக்கிரமித்த கருவேல மரங்கள் சமூக விரோத செயல்கள் அதிகரிப்பதாக புகார்

பரமக்குடி, ஜூன் 21: சத்திரக்குடி ரயில்வே குடியிருப்பில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது. பரமக்குடி அருகே சத்திரக்குடியில் ரயில்வே பணியாளர்களுக்காக குடியிருப்பு வீடுகள் ரயில் நிலையம் அருகில் கட்டப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக குடியிருப்பு வீடுகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளன. இதனால் வீடுகளுக்கு அருகில் கருவேல மரங்கள் அதிகம் சூழ்ந்து உள்ளது.
வீடுகளில் முறையான தண்ணீர் வசதியும் இல்லை. இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாததால் பலர் ரயில் நிலையத்தின் பின்பகுதியை மது அருந்தும் பாராக பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே போலீசார் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரயில்வே பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அப்பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் கூறுகையில், ‘இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாததால் சிரமம் அடைந்து வருகிறோம். இதுதவிர குடிநீர் வசதியும் இல்லை. கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷபூச்சிகள் வீட்டில் உள்ளே வருகின்றன. தற்போது நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வரும் நிலையில் அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.ரயில்நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ரயில்வே நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளை பாராக பயன்படுத்த அனுமதி கிடையாது. ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் கருவேல மரங்கள் உள்ள இடங்களை ஒருசிலர் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். பயணிகள் புகார் கூறிவரும் நிலையில் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை