×

எய்ம்ஸ் அமைவதால் தென்தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் மருத்துவச் சுற்றுலா மேம்படும்; வர்த்தக சங்கங்கள் வரவேற்பு

மதுரை, ஜூன் 21: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால், தென்மாவட்டங்களில் தொழில்வளர்ச்சி மற்றும் மருத்துவச் சுற்றுலா மேம்படும் என ன வர்த்தக சங்கத்தினர் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், முதுநிலைத்தலைவர் ரத்தினவேல் ஆகியோர் கூறுகையில், ‘மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தகுதியின் அடிப்படையில் மதுரை  தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் உள்ளது என தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கம் சார்பில், டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை உயர்மட்ட தேர்வுக்குழுவினர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா ஆகியோரை சந்தித்து மனு அளித்தோம். மதுரையில் எய்ம்ஸ் அமைவதால் உள்நாட்டு, வெளிநாட்டு தொழில்முனைவோர் மதுரை-தூத்துக்குடி தொழில் பெருவழிச்சாலையில் தொழில்களை துவங்க முன்வருவர். இதனால், தென்தமிழகத்தில் தொழில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். சுற்றுலாத்துறை, குறிப்பாக, மருத்துவச் சுற்றுலா மேம்படும். ரூ.1,500 கோடி மதிப்பில் 750 படுக்கை வசதியுடன், மருத்துவக்கல்லூரி, நர்சிங் கல்லூரி மற்றும் உயர் மருத்துவ ஆராய்ச்சிக் கல்வி ஆகிய கட்டமைப்புகளுடன் கூடிய இந்த மருத்துவமனையை விரைந்து கட்டி முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்’ என்றனர்.

* தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயப்பிரகாசம் கூறுகையில், ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வலியுறுத்தி, கடந்த 2015ம் ஆண்டு முதல் 2017 வரையிலும் சுகாதாரத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டாவை பலமுறை டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். மதுரை  அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதால்,  தென்மாவட்ட மக்கள் மட்டுமின்றி அனைத்து மாவட்ட மக்களும் பயன்பெற முடியும். மருத்துவமனையைச் சுற்றிலும், தொழில்நிறுவனங்கள் உருவாகும். இதனால், தென்மாவட்டங்கள் தொழில்வளர்ச்சி அடையும்’ என்றார்.

Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...