×

தமிழகம் முழுவதும் விடுதலையான கைதிகளை வைத்து பெட்ரோல் பங்க் நடத்த முடிவு சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர், ஜூன் 21: தமிழகம் முழுவதும் விடுதலையான கைதிகளை வைத்து பெட்ரோல் பங்க் நடத்த முடிவு செய்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக சிறைத்துறை சார்பில் நன்னடத்தை கைதிகளை கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்க் தொடங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக புழல், வேலூர், கோவை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் சிறைத்துறை மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதன்படி, வேலூர் தொரப்பாடி போலீஸ் குடியிருப்பு அருகே சிறைத்துறைக்கு சொந்தமான 2 ஆயிரம் சதுர அடி இடத்தில் பெட்ரோல் பங்க் அமையும் இடத்தை சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா கடந்த 12ம் தேதி ஆய்வு செய்தார்.

பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கான தடையில்லா சான்று கேட்டு சிறைத்துறை அதிகாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர். தடையில்லா சான்று கிடைத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு செப்டம்பர் மாதத்தில் பெட்ேரால் பங்க் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்நிலையில் நன்னடத்தை கைதிகளை கொண்டு பெட்ரோல் பங்க் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சிறை கைதிகள் யாரும் மாலை 6 மணிக்கு மேல் சிறைக்கு வெளியே இருக்க அனுமதி கிடையாது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் விடுதலையான நன்னடத்தை கைதிகளை கொண்டு பெட்ரோல் பங்க் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சிறையில் உள்ள கைதிகள் மாலை 6 மணிக்கு மேல் சிறைக்கு வெளியே இருக்க அனுமதி கிடையாது. இதனால் மத்திய சிறையில் இரவு உணவகத்தில் கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் இரவு நேர உணவகம் மூடப்பட்டது. தற்போது பெட்ரோல் பங்க் 24 மணி நேரம் இயங்க வேண்டும். தற்போது சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து விடுதலையான கைதிகளை வைத்து மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பெட்ரோல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விடுதலை கைதிகளின் பட்டியலில் விருப்பம் உள்ளவர்களை பணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags :
× RELATED வேலூர் அருகே காரில் கடத்தல்: பாஜக...