×

எச்சரிக்கை விடுவதற்காக வந்துள்ளேன் மணல் திருடர்களை பாலாற்றில் புதைப்பேன் சமூக ஆர்வலர் எச்சரிக்கை

ஆம்பூர், ஜூன் 21: ஆம்பூர் பாலாற்றில் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டால் அவர்களை பாலாற்றில் குழி தோண்டி புதைப்பேன் என பெண் சமூக ஆர்வலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விருதுநகரை சேர்ந்தவர் நர்மதா நந்தகுமார்(45). இவர் தற்போது சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் மணல் திருட்டை தடுத்து நிறுத்த கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பாலாற்றுக்கு நர்மதா நந்தகுமார் நேற்று வந்தார்.

அங்கு குழிதோண்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளாக நீர் நிலைகளை பாதுகாத்தல், தூர் வாருதல் மற்றும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பதற்காகவும் தனி நபராக நான் போராடி வருகிறேன். அமைச்சர் வீரமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாலாற்றில் மணல் திருட்டு நடத்தி வருவதாக எனக்கு தகவல் கிடைத்தது. அதனால் இங்கு வந்து பாலாற்றில் குழி தோண்டி உள்ளேன். மணல் கொள்ளையை உடனடியாக நிறுத்தாவிட்டால், மணல் கொள்ளையர்களை உயிரோடு இந்த குழியில் போட்டு புதைப்பேன். இதை நான் நிச்சயம் செய்வேன். அதற்கு எச்சரிக்கை விடுப்பதற்காக இங்கு வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

தகவலறிந்த உம்ராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, துத்திப்பட்டு வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பெண் சமூக ஆர்வலர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED முதல் வாக்காளர்கள், 5 நாளான...