×

கிருஷ்ணகிரியில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தொல்லியல், கேளிக்கை பூங்கா அமைக்க நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஜூன் 20:  கிருஷ்ணகிரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தொல்லியல், கேளிக்கை பூங்காக்களை அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களின் எல்லையோரம் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் பல வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டமாகும். இதற்கு சான்றாக பழமையான கோட்டைகள், அணைக்கட்டுகள், கல்வெட்டுகளும் உள்ளன. இம்மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் உள்ள இடங்கள் மிகவும் குறைவே. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணைக்கு அண்டைய மாநிலங்களில் இருந்தும், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

35 ஏக்கரில் இயற்கை சூழலுடன் அமைந்துள்ள பூங்கா சுற்றுலா பயணிகள் கவரும் வகையில் இருந்தாலும், பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதேபோல், ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையில் உள்ள பூங்கா பராமரித்து மேம்படுத்த வேண்டும். கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் அவதானப்பட்டியில் சிறுவர் பூங்காவும், படகு இல்லமும் அமைந்துள்ளது. இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளை கவரும் இச்சிறுவர் பூங்கா, படகு இல்லம் அருகே அனைத்தும் ஒருங்கிணைந்த கேளிக்கை பூங்கா(தீம் பார்க்) அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த திட்டம் தற்போது கிடப்பில் உள்ளது. இதேபோல், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சின்ன ஏரியில் படகு இல்லம், பூங்கா அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மேலும், மல்லசந்திரம் கிராமத்தில் இரட்டை மலைகளின் உச்சியில் ‘மோரல் பாறை’ என்று அழைக்கப்படும் இடம் ஒன்று உள்ளது. இவ்விடத்தில் 3 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த நமது மூதாதையர்களின் ஈமகாடு அமைந்துள்ளது.

இங்கு, சுமார் 300க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் உள்ளன. இவ்விடத்தில் தொல்லியல் பூங்கா அமைத்து, கேட்பாராற்று கிடக்கும் கல்வெட்டுகளை சேகரித்து ஒரே இடத்தில் உரிய தகவல்களுடன் வைத்து பராமரிக்க வேண்டும். இதன் மூலம் இம்மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் வரலாற்றினை அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும். வரலாற்று சின்னங்களை அழிவில் இருந்து பாதுகாக்க முடியும். 5 தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்துறையுடன் வனத்துறை, பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்