×

13 ஆயிரம் புதிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று வேலூர் வருகை நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த நடவடிக்கை பெங்களூரில் இருந்து

வேலூர், ஜூன் 20:பெங்களூரில் இருந்து வேலூருக்கு 13 ஆயிரம் புதிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று கொண்டு வரப்பட உள்ளது. இந்த இயந்திரங்களை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தும் வகையில் 14 லட்சம் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க மத்திய அமைச்சரவை குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக கடந்த 15 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள 9 லட்சம் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களின் ஆயுட்காலம் நிறைவடைவதையொட்டி தலைமை தேர்தல் ஆணையம் 14 லட்சம் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி 13 லட்சத்து 95 ஆயிரத்து 648 வாக்குபதிவு இயந்திரங்களும், 9 லட்சத்து 30 ஆயிரத்து 432 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் வாங்கி ஒவ்வொரு மாநிலமாக தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கியுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெங்களூரு பெல் நிறுவனத்தில் புதிதாக தயாரிக்கப்பட்டு இன்று வேலூருக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்ைட, ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 13 சட்டமன்ற தொகுதிகளுக்கும், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை(ஒருபகுதி) ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

இங்கு மொத்தம் 1,657 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. இதில் 3,439 வாக்குபதிவு மையங்கள் உள்ளன. மொத்தம் 30 லட்சத்து 51 ஆயிரத்து 171 வாக்காளர்கள் உள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த மொத்தம் 8 ஆயிரத்து 700 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4 ஆயிரத்து 730 கட்டுப்பாடு கருவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 13,430 கருவிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள் மூலம் இன்று வேலூருக்கு வர உள்ளது. கலெக்டர் தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அவை குடோனில் வைக்கப்படும். யாருக்கு வாக்கு அளித்தோம் என்று தெரிந்து கொள்ளும் விவிபேட் இயந்திரம் பிறகு வரும் என்று தேர்தல் தாசில்தார் சச்சுதானந்தன் தெரிவித்தார்.

Tags :
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த 6 காட்டு...