×

நன்னடத்தை கைதிகளுக்கு பேக்கரி தொடங்க ₹2.40 கோடி ஒதுக்கீடு அதிகாரிகள் தகவல் வேலூர், கோவை, திருச்சி உள்ளிட்ட 8 சிறைகளில்

வேலூர், ஜூன் 20:வேலூர், கோவை, திருச்சி உள்ளிட்ட 8 மத்திய சிறைகளில் நன்னடத்தை கைதிகள் பேக்கரி தொடங்க ₹2.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வேலூர், மதுரை, திருச்சி, கோவை, சேலம், பாளையங்கோட்டை, கடலூர், புழல் ஆகிய 9 மத்திய சிறைகள் உள்ளன. இவற்றில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறைக்குள் ஒரு பகுதியில் சிறு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதில் வேலை செய்வதன் மூலம் கைதிகள் பணம் ஈட்டுவதோடு மட்டுமின்றி, அவர்களுக்கு புதிய தொழில்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

அதன்படி, 9 மத்திய சிறைகளிலும் நன்னடத்தை கைதிகளை கொண்டு விவசாயம், ஓட்டல், முடி திருத்தகம், சலவையகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து நன்னடத்தை கைதிகளுக்கான பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கைதிகளுக்கு பேக்கரி அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பேக்கரி அமைப்பதற்கான உபகரணங்கள் வாங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் புழல் சிறையில் மட்டும் தற்போது பேக்கரி அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. கைதிகள் தயாரிக்கும் பிரட் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து வேலூர், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 8 மத்திய சிறைகளில் பேக்கரி அமைப்பதற்காக தேவையான உபகரணங்கள் வாங்க ஒரு சிறைக்கு தலா ₹30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உபகரணங்கள் வாங்கப்பட்டு வருகிறது.

பேக்கரி பொருட்களை தயாரிப்பது குறித்து சிறை காவலர்களுக்கு அந்த பகுதியில் உள்ள பெரிய பேக்கரி நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு சிறையிலும் 3 முதல் 5 காவலர்கள் வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெற்ற காவலர்கள் மூலம் சிறையில் கைதிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது’ என்றனர்.

Tags :
× RELATED முதல் வாக்காளர்கள், 5 நாளான...