×

கள்ளழகர்கோயிலில் முப்பழ உற்சவ விழா 28ம் தேதி நடக்கிறது

அழகர்கோவில், ஜூன் 20: கள்ளழகர் கோயில் திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்றும், போற்றி புகழப்படும் பெருமை படைத்தது. 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது. வற்றாத நூபுரகங்கையுடன் அருள்பாலித்து வரும் மதுரை அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோயிலாகும். இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி மாதம் ஆண்டுதோறும் நடைபெறும் முப்பழ உற்சவ விழாவும் ஒன்றாகும். இந்த விழா வருகிற 28ம் தேதி வியாழக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் கள்ளழகர் கோயிலில் நடைபெறுகிறது. இக்கோயிலின் உப கோயிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் அதே தேதியில், அதே நேரத்தில் அதே விழா நடைபெறும்.

இதையொட்டி மா, பலா, வாழை ஆகிய முப்பழங்களும் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் பெருமாளுக்கு படைத்து சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெறும். இதேபோல் தல்லாகுளம் கோயிலிலும் பூஜைகள் நடைபெறும். இந்த விழா குறித்து பக்தர் ஒருவர் கூறியதாவது: வருடம்தோறும் ஆனி மாதத்தில் இந்த முக்கனிகளும் ஒன்றாக விளைச்சல் பெற்று அறுவடை ஆகும் மாதமாகும். மேலும் இந்த பழ விவசாயிகள் தங்களது நிலத்தில் விளையும் முப்பழங்களையும் கோயிலில் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை